வணிகம்

நான்காவது தொழிற்புரட்சி புதிய சிந்தனைகளையும் உள்ளடக்கியது - பிரதமர் நரேந்திர மோடி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நான்காவது தொழிற்புரட்சிக்கு தலைமையேற்று வழி நடத்தும் திறன் இந்தியாவுக்கு உள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

தொழிற்துறை 4.0 மாநாடு நேற்று நடைபெற்றது. இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையை கனரக தொழில் துறை அமைச்சகத்தின் இணை செயலர் வாசித்தார். அதில் மோடி கூறியிருப்பதாவது: இந்தியாவை உலகின் உற்பத்தி மையமாக உருவெடுக்க செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் அனைத்தையும் அரசு துரித கதியில் மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து, சர்வதேச விநியோக சங்கிலியில் நமது தொழிற் துறை மற்றும் தொழில் முனைவோர்களின் பங்கு மிக முக்கியமானதாக மாறியுள்ளது. எனவே, நான்காவது தொழிற்புரட்சிக்கு தலைமையேற்று வழி நடத்தும் திறன் இந்தியாவுக்கு அதிகமாகவே உள்ளது. நான்காவது தொழிற்புரட்சி என்பது புதிய தொழில்நுட்பத்தைப் போலவே புதிய சிந்தனைகளையும் உள்ளடக்கியது.

கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களால் தொழிற்புரட்சியில் பங்கேற்க முடியாமல் போய்விட்டது. ஆனால், நான்காவது தொழிற்புரட்சியை வழிநடத்தும் திறன் அண்மைக்கால இந்திய வரலாற்றில் தற்போது முதன் முறையாக நமக்கு கிடைத்துள்ளது. மக்கள் தொகை, தேவை மற்றும் தீர்க்கமான நிர்வாகத் திறன் ஆகியவை நம்மை ஒன்றிணைக்கும் காரணிகளாக உள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் மோடி தெரிவித்துள்ளார்.

மாநாட்டில் மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே பேசுகையில், ‘‘4.0 தொழிலக புரட்சியின் மூலமாக உற்பத்தி நடவடிக்கைகளை ஊக்குவிக்க அரசு பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் பயனாக, உலகளாவிய உற்பத்தி யின் மையமாக இந்தியா முன்னேறி வருகிறது. 3டி பிரின்டிங், மெஷின் லேர்னிங், டேட்டா அனாலிட்டிக்ஸ் மற்றும் ஐஓடி ஆகியவை தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு மிக முக்கிய காரணிகளாக உள்ளன.அட்வான்ஸ்டு கெமிஸ்ட்ரி செல் (ஏசிசி) பேட்டரி ஸ்டோரேஜுக்கான உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்குவிப்புத் திட்டம் இந்தியாவின் பேட்டரி இறக்குமதியை வெகுவாக குறைக்க உதவும்’’ என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT