சென்னை: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா சார்பில் பல்வேறு கடன் திட்டங்கள், சமூக பாதுகாப்பு, அனைவருக்குமான வங்கி சேவை வழங்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மகாத்மா காந்தியின் 153-வது பிறந்த தினத்தை முன்னிட்டு யூனியன் வங்கி கடந்த செப். 15 முதல் அக்.1-ம் தேதி வரை பல்வேறு நிதி சேவைகள், கடன் திட்டங்கள், நலத்திட்டங்களை செயல்படுத்தியது. பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா திட்ட பயனாளிகள், கிராம சுய உதவிக் குழுக்கள், முத்ரா திட்ட கடன்கள் ஆகியவை வழங்கப்பட்டன. சுமார் 10 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு கடன்கள் வழங்கப்பட்டன. மேலும் விவசாய கடன் அட்டைகளுக்கான உதவிகள், சாலை வணிகர்களுக்கு க்யூஆர் குறியீடு வழங்கல் ஆகியவையும் நடைபெற்றது.
கழிப்பறை கட்டிடங்கள் மேலும் நாடு முழுவதும் பள்ளிகளில் குறிப்பாக பெண்கள் பள்ளிகளில் 250 கழிப்பறை கட்டிடங்கள், கிராமப்புறங்களில் 100 கழிப்பறை கட்டிடங்களை வங்கி சார்பில் கட்டவுள்ளதாகவும், பிராந்தியம் முழுவதும் ஆதரவற்றோர் இல்லங்களில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஏ.மணிமேகலை பேசும்போது, “சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் நிதி உதவி வழங்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அடித்தட்டு மக்களின் நிதிச் சேர்க்கை மற்றும் மேம்பாட்டுக்கு ஒரு முக்கிய உதவியாளராக இருக்க வேண்டும் என்பதே எங்கள் முயற்சி’’ என்று கூறினார்.