கிராமப்புற வாழ்வாதாரம் மற்றும் மக்களின் பொருளாதாரத்தில் கால்நடைகளின் பங்கு இன்றியமையாததாகும். கால்நடை வளர்ப்பானது, குறிப்பாக பெண்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு நிலையான வருமானத்தை பெற்றுத்தந்து,
அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகிறது. சிறு, குறு விவசாயிகள் மற்றும் நிலமற்ற ஏழை மக்களுக்கு வாழ்வாதாரத்தை அளிக்கும் தொழிலாகவும் இது விளங்குகிறது.
கோவையில் சிந்தி, காங்கயம் மற்றும் முர்ரா போன்ற உள்நாட்டு இனங்கள் மட்டுமல்லாது கூடுதலான பால் உற்பத்தியை தரும் ஜெர்சி கலப்பின மாடுகள் மற்றும் ஹோல்ஸ்டீன் பிரிசியான் கலப்பின மாடுகள் விவசாயிகளால் வளர்க்கப்படுகின்றன.
அதேபோல் உள் நாட்டு இன செம்மறி ஆடுகளில் கோவை குரும்பை, மேச்சேரி மற்றும் உள் நாட்டினவெள்ளாடுகளில் கன்னி ஆடு, கொடி ஆடு, மோளை ஆடு ஆகியவை வளர்க்கப்படுகின்றன.
கால்நடை வளர்ப்போரின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு மருத்துவ சேவைகளை கால்நடை பராமரிப்புத்துறை இலவசமாக வழங்கி வருகிறது.
கோவையில் தலா ஒரு பன்முக கால்நடை மருத்துவமனை, கால்நடை பெரு மருத்துவமனை, 15 கால்நடை மருத்துவமனைகள், 98 கால்நடை மருந்தகங்கள், 2 நடமாடும் கால்நடை மருந்தகங்கள், 2 பார்வை கிளை நிலையங்கள் மற்றும் 26 கால்நடை கிளை நிலையங்கள் மூலம் மாடுகள், ஆடுகள், கோழிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் ஆர்.பெருமாள்சாமி கூறியதாவது: விலையில்லா வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் மற்றும் விலையில்லா நாட்டுக் கோழிகளை கிராமப்புற ஏழை மகளிருக்கு வழங்குவதன் மூலம், அவர்களை தொழில் முனைவோராக மாற்றி கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், கிராம பொருளாதாரத்தை உயர்த்தவும் கால்நடை பராமரிப்புத்துறை பெரும் பங்காற்றி வருகிறது.
மேலும், இத்துறை மூலம் உயர் மரபணு தகுதியுள்ள காளைகளின் உறைவிந்து மூலம் செயற்கை முறை கருவூட்டல், மத்திய அரசால் செயல்படுத்தப்படும் தேசிய செயற்கை முறை கருவூட்டல், விலையில்லா தீவன இடுபொருட்கள், கால், வாய் நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு எதிராக தடுப்பூசிகள் போன்றவை வழங்கப்படுகின்றன.
இலவச தீவன விதைகள்: பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உற்பத்தி செலவில் 70 சதவீதத்தை தீவனத்துக்கே செலவு செய்ய வேண்டியுள்ளது.
வளமற்ற மேய்ச்சல் நிலங்களிலிருந்து கிடைக்கும் தீவனத்தைவிட, பயிரிடப்பட்ட தீவனங்களிலிருந்து பெறப்படும் ஊட்டச்சத்து, கால்நடை உற்பத்திக்கு உகந்ததாகும். மேலும் உணவு மற்றும் பணப் பயிர்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், விவசாய நிலத்தில் பசுந்தீவன சாகுபடி பரப்பு குறைந்துகொண்டே வருகிறது.
எனவே, இவற்றைக் கருத்தில் கொண்டு, தட்டுப்பாடின்றி தீவனம் அளிக்கும் வகையில் மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் மூலம் தீவனப் பயிர் வளர்ப்பதற்கு, சிறந்த மகசூல் வழங்கக்கூடிய தீவன விதைகள் மற்றும் புல் கரணைகள் கால்நடை வளர்ப்போருக்கு விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.
இதுமட்டுமல்லாது, தீவன விளைச்சலை அதிகரிக்கவும், வீண் விரயத்தை குறைக்கும் நோக்கில் நவீன கருவிகளான புல் நறுக்கும் கருவிகள் மற்றும் புல் வெட்டும் கருவிகள் மானியத்துடன் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆடுகள் வழங்கும் திட்டம்: பெண்களை தொழில் முனைவோராக உருவாக்கும் திட்டத்தில் ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு 100 பயனாளிகள் வீதம் 12 ஒன்றியங்களில் 1,200 ஆதரவற்ற, விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் தேர்வு செய்யப்பட்டு, தலா ஐந்து வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வீதம் 6,000 ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன.
200 பயனாளிகளுக்கு புல் வெட்டும் கருவிகள் மற்றும் புல் நறுக்கும் கருவிகள் 75 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன. அரசு மேய்க்கால் நிலங்களை பயன்படுத்தும் விதமாக, மேய்க்கால் நில மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 1,000 ஏக்கர் மேய்க்கால் நிலம் தேர்வு செய்து மேம்பாடு செய்யப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில் அன்னூர், கிணத்துக்கடவை அடுத்த காரச்சேரி, அரசம்பாளையம், சூலூர் வட்டாரத்தில் வதம்பச்சேரி, செம்மாண்டம்பாளையம், சுல்தான்பேட்டை அருகே இடையர்பாளையம் உள்ளிட்ட இடங்களில் சுமார் 50 ஏக்கர் நிலத்தில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பருவ மழை காலத்தில் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் பசுந்தீவனத்தை, விவசாயிகளே ஊறுகாய் புல் தயாரித்து தீவனப் பற்றாகுறை காலத்தில் பயன்படுத்துவதற்கு ஏதுவாக 5 ஊறுகாய் புல் தயாரிக்கும் அலகுகள் கோவையில் வழங்கப்பட்டுள்ளன.
50 சதவீத மானியம்: கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி, தேசிய கால்நடைகள் இயக்ககம் சார்பாக பன்றி வளர்ப்பு, நாட்டின கோழிகள் அபிவிருத்தி மற்றும் பண்ணைகள் அமைத்தல், நாட்டு இன செம்மறியாடு, வெள்ளாடு வளர்ப்பு மற்றும் தீவன உற்பத்தி மற்றும் மேம்பாட்டுக்கு 50 சதவீத மானியத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது.
தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின்மூலம் நாட்டு இன பசு மற்றும் கலப்பின பால் பண்ணைகள் நிறுவிட 50 சதவீத மானியத்தில் கடனுதவி செய்யப்படுகிறது.
கால்நடைகளில் ஏற்படும் அசாதாரண இறப்பை ஈடுகட்டும் வகையில், கால்நடைகளுக்கு மானியத்தில் காப்பீடு செய்யப்பட்டு வருகிறது. கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில் நடைமுறை மூலதனச் செலவினத்தை ஈடுசெய்திட வங்கிகள் மூலம் கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.