வணிகம்

கோவையில் தயாராகும் தங்க நகைக்கு வெளிநாடுகளிலும் மவுசு

செய்திப்பிரிவு

தொழில் நகரான கோவை தங்க நகை தயாரிப்பில் சிறந்து விளங்குகிறது. 700 ஆண்டு களுக்கு முன்பிருந்தே இப்பகுதியில் தங்க நகை தொழில் செயல்பட்டு வந்துள்ளது.

இன்று நவீன தொழில்நுட்பங்களுடன் இந்தியாவில் தங்க நகை தொழிலில் சிறந்து விளங்கும் முதல் மூன்று நகரங்கள் பட்டியலில் கோவை மூன்றாவது இடத்தில் உள்ளது.

முதல் இரண்டு இடங்களில் மும்பை மற்றும் கொல்கத்தா நகரங்கள் உள்ளன. இந்தியாவின் மொத்த தங்க நகை ஏற்றுமதியில் கோவை மாநகரம் 6 சதவீத பங்களிப்பு கொண்டுள்ளது.

முதலீடு செய்து வர்த்தகம் செய்பவர்கள் 3,000 பேர், தங்க நகைகள் தயாரிப்புக்கு தேவையான உதிரிபாகங்கள் தயாரிப்பவர்கள் 10,000 பேர், தங்க கட்டிகளை வாங்கி நகை செய்து தரும் பட்டறை தொழிலில் 45,000 பேர் உள்ளனர்.

நேரடியாகவும், மறைமுக மாகவும் ஒரு லட்சம் பேர் கோவையில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். கரோனா தொற்று பரவலுக்கு முன் தினrசரி 200 கிலோ எடையிலான தங்க நகை வர்த்தகம் நடைபெறும். தற்போது அதில் 50 சதவீதம் அதாவது 100 கிலோ எடையிலான தங்க நகை வர்த்தகம் நடக்கிறது.

கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.முத்து வெங்கட் ராம் கூறும்போது, ‘‘கிருஷ்ண தேவராயர் கர்நாடகாவில் ஆட்சி செய்த போது அவரது பாரம்பரியத்தில் வந்தவர்களால் கோவையில் தங்க நகை தயாரிப்பு தொழில் தொடங்கப்பட்டுள்ளது.

700 ஆண்டுகள் பாரம்பரியமிக்க இத்தொழில் கோவை மட்டு மின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகள் மற்றும் சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் கோவை தங்க நகை தயாரிப்புகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது.

பழங்கால நகைகளான ‘ஆன்டிக்’ வகை நகை களுக்கு கோவை உள்பட கொங்கு மண்டலத்தின்கீழ் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மிகுந்த வரவேற்பு உள்ளது.

ஜிஎஸ்டி வரி 3 சதவீதத்தை 1.5 சதவீத மாகவும், தங்கத்துக்கான இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும் குறைக்க மத்திய அரசுக்கு தயாரிப்பாளர்கள் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் கடத்தல் தங்கம்குறைவதுடன் உள்நாட்டில் தங்க நகை தொழில் மிகச் சிறந்த வளர்ச்சியை அடையும்.

தங்கத்தில் முதலீடு செய்வது எதிர்காலத்துக்கு மிகவும் சிறந்த பயன் தரும். கரோனா நோய்தொற்று பாதிப்பு ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள கோவை மட்டுமின்றி இந்திய மக்களிடம் சேமிப்பில் இருந்த தங்க நகைகள் மற்றும் தங்க கட்டிகள் பெரிதும் உதவின. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்துகொண்டே தான் இருக்கும்’ என்றார்.

SCROLL FOR NEXT