புதுடெல்லி: புதிய வண்ணத்தில் அக்சஸ் 125 ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது சுசுகி நிறுவனம். பண்டிகை களம் நெருங்குவதை முன்னிட்டு தனது வாடிக்கையாளர்களுக்கு வண்ண வண்ண ஆப்ஷனை கொடுக்கும் நோக்கில் இதனை அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம். இந்த ஸ்கூட்டர் அந்நிறுவனத்தின் பிரபல மாடல்களில் ஒன்றாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2006 வாக்கில் சுசுகி நிறுவனம் இந்தியாவில் தனது இயக்கத்தை தன்னிச்சையாக தொடங்கியது. அதற்கு முன்னர் மாருதி மற்றும் டிவிஎஸ் நிறுவனங்களுடன் இணைந்து சுசுகி இயங்கி வந்தது. ஹரியாணாவில் இந்நிறுவனத்தின் உற்பத்திக் கூடம் இயங்கி வருகிறது. ஜப்பான் நாட்டை தலைமையிடமாக கொண்டு இந்நிறுவனம் இயங்கி வருகிறது. பைக் மற்றும் ஸ்கூட்டர்களை இந்தியாவில் உற்பத்தி செய்து, விற்பனை செய்து வருகிறது சுசுகி.
அதில் பெருவாரியான மக்களின் விருப்பமான ஸ்கூட்டராக உள்ளது அக்சஸ். இந்நிலையில், புதிய ட்யூயல் டோன் வண்ணத்தில் இந்த ஸ்கூட்டரை சுசுகி இப்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய வண்ணம் ஸ்பெஷல் எடிஷன் மற்றும் ரைடு கனெக்ட் எடிஷனுக்கு மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலிட் ஐஸ் க்ரீன்/பேர்ல் மிராஜ் வொயிட் என்ற புதிய வண்ணத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே உள்ள மூன்று வண்ணங்களுடன் இந்த புதிய வண்ணம் ஸ்பெஷல் எடிஷனிலும், ஏற்கனவே உள்ள 5 வண்ணங்களுடன் இந்த புதிய வண்ணம் ரைடு கனெக்ட் எடிஷனிலும் கிடைக்கும் என சுசுகி தெரிவித்துள்ளது. ஸ்பெஷல் எடிஷனின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.83,000. ரைடு கனெக்ட் எடிஷனின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.85,200 மற்றும் ரூ.87,200 என விற்பனை செய்யப்படுகிறது.
4 ஸ்ட்ரோக், சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு 124 சிசி எஞ்சினை கொண்டுள்ளது. ரைடு கனெக்ட் எடிஷனில் பயனர்கள் தங்கள் போனை ஸ்கூட்டருடன் சிங்க் செய்து கொள்ளலாம். அதன் மூலம் அழைப்பு மற்றும் நேவிகேஷன் உட்பட பல்வேறு அம்சங்களை பயன்படுத்த முடியும். இது ப்ளூடூத் இணைப்பு மூலம் செயல்படுகிறது.