மும்பை: பணவீக்கத்தை கட்டுப்படுத்த முன்னுரிமை அளிக்கும் வகையில் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் மேலும் 0.50 சதவீதம் (50 அடிப்படை புள்ளிகள்) அதிகரிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
நேற்று நடைபெற்ற பணவியல் கொள்கை குழு கூட்டத்தில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் பேசியதாவது: பணவீக்கம் குறையும் என எதிர்பார்த்த நிலையில் தொடர்ந்து அதிகரித்தே காணப்படுகிறது. விலை உயர்வால் ஏற்படும் அழுத்தங்களை சமாளிக்க அதிகளவு பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகி உள்ளது. அந்த வகையில், ரிசர்வ் வங்கியிடமிருந்து குறுகிய கால அடிப்படையில் வணிக வங்கிகள் பெறும்கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.50 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 5.9 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வணிக வங்கிகளின் கடன் செலவினம் அதிகரிக்கும்.
பொருளாதார வளர்ச்சி
நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 7.2 சதவீதமாக இருக்கும் என முன்னர் கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், எதிர்பார்த்த அளவில் பணவீக்கம் குறையாததால் நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீடு 7 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பொருளாதார வளர்ச்சி விகிதம் இரண்டாவது காலாண்டில் 6.3 சதவீதமாகவும், மூன்றாவது காலாண்டில் 4.6 சதவீதமாகவும், நான்காவது காலாண்டில் 4.6 சதவீதமாகவும் இருக்கும். அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.2 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட் டுள்ளது.
நடப்பு நிதியாண்டில் பணவீக்கமானது முன்பு மதிப்பீடு செய்யப்பட்டதைப் போலவே 6.7 சதவீதம் என்ற அளவிலேயே நீடித்து இருக்கும். அதேசமயம், 2-வது காலாண்டில் இந்த பணவீக்கத்தின் அளவு 7.1 சதவீதமாகவும், 3 மற்றும் 4-வது காலாண்டில் முறையே 6.5 சதவீதம் மற்றும் 5.8 சதவீதமாகவும் இருக்கும். 2023-24-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் பணவீக்கம் 5 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த இரண்டரை ஆண்டுகளில் கரோனா தொற்று மற்றும் உக்ரைன்-ரஷ்யா போர் ஆகிய 2 பெரிய அதிர்வுகளை உலகம் தாங்கியுள்ளது. உலக அளவில் அமைதியற்ற சூழல் இருந்த போதிலும் இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வேகமான மீள்தன்மை யுடன் இருந்து வருகிறது. இவ்வாறு சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
வீடு, வாகன மாத தவணை உயரும்
ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளதால் வீடு, வாகன கடன்கள் வாங்கிய வாடிக்கையாளர்களின் மாதாந்திர தவணையும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதேநேரம், நிரந்தர வைப்புகளுக்கான வட்டியை வங்கிகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்செக்ஸ் 1,016 புள்ளிகள் உயர்வு
ரெப்போ வட்டி விகித உயர்வு பங்குச் சந்தையில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. வங்கி, உலோகம் சார்ந்த பங்குகளுக்கு சந்தையில் அதிக தேவை காணப்பட்டது. இதையடுத்து, சென்செக்ஸ் 1,016.96 புள்ளிகள் (1.8%) அதிகரித்து 57,426.92 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 276.25 புள்ளிகள் (1.64%) உயர்ந்து 17,094.35 புள்ளிகளில் நிலைபெற்றது.