புதுடெல்லி: இந்தியாவின் மிகப்பெரும் மற்றும் பழமையான செய்தி நிறுவனமான பிடிஐ-யின் இயக்குநர்களில் ஒருவராக ‘தினமலர்’ நாளிதழின் கோவை பதிப்பின் வெளியீட்டாளர் எல்.ஆதிமூலம் நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று பிடிஐ-யின் வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் இந்த நியமனம் அறிவிக்கப்பட்டது.
பிடிஐ எனப்படும் ‘பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா’, பல்வேறு பத்திரிகை உரிமையாளர்களால் டெல்லியில் 1947-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. லாப நோக்கற்ற கூட்டுறவு அமைப்பாக பிடிஐ செயல்பட்டுவருகிறது. இந்நிறுவனம் மூலம் கிடைக்கும் லாபத்தை அதன் பங்குதாரர்கள் நிறுவனத்தின் மேம்பாட்டுக்காகவே செலவிடுகின்றனர்.
தற்போது பிடிஐ-யின் தலைவராக அவீக் சர்கார் உள்ளார். இந்நிலையில் பிடிஐ இயக்குநர்களில் ஒருவராக எல்.ஆதிமூலம் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், பிடிஐயின் துணைத் தலைவராக பதவி வகித்து வரும் சாந்தகுமார், மீண்டும் அடுத்த ஓராண்டுக்கு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பிடிஐ இயக்குநர்கள் குழுவில் இந்தியாவின் வெவ்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த முன்னணி வெளியீட்டாளர்கள் இடம்பெற்றுள்ளனர். மொத்தமாக பிடிஐ இயக்குநர்கள் குழுவில் 16 பேர் இடம்பெற்றுள்ளனர்.
தினமலர் நாளிதழின் நிர்வாகப் பிரிவில் கடந்த 37 ஆண்டுகளாக அங்கம் வகித்து வரும் எல்.ஆதிமூலம், தினமலர் நாளிதழின் கோவை பதிப்பின் வெளியீட்டாளராகவும் அந்நாளிதழின் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப தலைவராகவும் உள்ளார். தினமலர் நாளிதழின் அச்சு, விநியோகம் மற்றும் இணையதளத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதில் அவர் முக்கிய பங்காற்றிவருகிறார்.