சேலம் செவ்வாய்பேட்டையில், முழு வடிவம் பெற்ற வெள்ளிக்கொலுசுகளை மெருகேற்றுவதற்காக வெள்ளிப்பட்டறையில் பாலீஷ் போடுவதற்கு தயார்படுத்தும் தொழிலாளர்கள். படம்: எஸ்.குரு பிரசாத் 
வணிகம்

வெள்ளி விலை குறைந்தும் தீபாவளி பண்டிகைக்கான ஆர்டர் வரவில்லை: சேலத்தில் உற்பத்தியாளர்கள் கவலை

எஸ்.விஜயகுமார்

வெள்ளியின் விலை குறைந்துள்ள நிலையிலும், சேலம் வெள்ளிக்கொலுசுகளுக்கு தசரா, தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு விற்பனைக்கான ஆர்டர் வராமல் இருப்பதால், உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

வெள்ளிக்கொலுசு உற்பத்தியில் இந்திய அளவில் சேலம் முதன்மை பெற்று விளங்குகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் வெள்ளிக்கொலுசுகள் கலைநயம், நுணுக்கம், உறுதி, தரம் என அனைத்திலும் சிறந்து இருப்பதால், தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் விற்பனையாகிறது.

கரோனா பரவல் காரணமாக, 2 ஆண்டுகளாக கொலுசு வர்த்தகமும் பாதிக்கப்பட்டது. கரோனா கட்டுக்குள் வந்துவிட்டதால், பண்டிகை கால வர்த்தகம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், தசரா, தீபாவளி நெருங்கிவிட்ட நிலையிலும், விற்பனைக்கான ஆர்டர் கிடைக்காததால் சேலத்தில் வெள்ளிக்கொலுசு உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த வெள்ளிக்கொலுசு உற்பத்தியாளர்கள் சிலர் கூறியதாவது:

சேலத்தில் சிவதாபுரம், செவ்வாய்பேட்டை, நெத்திமேடு, குகை என பரவலாக, குடிசைத் தொழிலாக வெள்ளிக்கொலுசு உற்பத்தி செய்யப்படுகிறது. இத்தொழிலில், 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வெள்ளிக்கொலுசு என்பது, 10-க்கும் மேற்பட்ட இடங்களில் படிப்படியாக உருவாக்கப்பட்டு, பின்னரே முழுமையான கொலுசாக வடிவெடுக்கும். மேனகா, சாவித்திரி, குஷ்பு என பல டிசைன்களில் வெள்ளிக்கொலுசுகளும், இதிகம், மெட்டி, கர்ணம், தண்டை, அரைஞாண் கொடி உள்ளிட்ட ஆபரணங்களும் வெள்ளியில் தயாரிக்கப்படுகின்றன.

பண்டிகைக் காலங்களில் ஆபரணங்கள் வாங்குவதில் மக்கள் ஆர்வமுடன் இருப்பது வழக்கம். ஆனால், தீபாவளி நெருங்கிவிட்ட நிலையிலும் வெள்ளிக்கொலுசுகளுக்கான ஆர்டர் வரவில்லை.

பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால், கல்விக் கட்டணம் செலுத்துவது, பண்டிகைகளுக்கு அத்தியாவசியமான துணி வகைகள், பிற பொருட்களை வாங்க வேண்டியிருப்பதால், மக்கள் ஆபரணங்களுக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை என்று கருதுகிறோம், என்றனர்.

சேலம் மாவட்ட வெள்ளிக்கொலுசு உற்பத்தி கைவினைஞர்கள் சங்கத்தின் தலைவர் ஸ்ரீ ஆனந்த ராஜன் கூறியதாவது:

தீபாவளிக்கு இரு மாதங்களுக்கு முன்னரே வெள்ளிக்கொலுசுகளுக்கு ஆர்டர் வந்துவிடும். பண்டிகை ஆர்டருக்காக வழக்கத்தை விட 40 சதவீதம் கூடுதலாக வெள்ளிக்கொலுசு உற்பத்தி செய்யப்படும்.

ஆனால், தீபாவளிக்கு ஒரு மாதம் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில், வெள்ளிக் கொலுசுகளுக்கான ஆர்டர் வரவில்லை. ஒரு மாதத்துக்கு முன்பு ஒரு கிலோ வெள்ளி கிலோ ரூ.62,000 ஆக இருந்தது. தற்போது ரூ.57,000 ஆக குறைந்துள்ளது.

இதன் காரணமாக, சராசரியாக 100 கிராம் எடை கொண்ட வெள்ளிக்கொலுசின் விலை ரூ.6,500-ல் இருந்து, ரூ.5,700 வரை வந்துவிட்டது. ஆனாலும், விற்பனை உயரவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக உற்சாகமான தீபாவளி அமையவில்லை.

தற்போது, பண்டிகையை முன்னிட்டு, ஆர்டரும் வரவில்லை. ஓரிரு வாரங்களில் ஆர்டர் வந்தால், வெள்ளிக் கொலுசு தொழிலில் உள்ளவர்களும் தீபாவளியை உற்சாகமாக கொண்டாட முடியும், என்றார்.

SCROLL FOR NEXT