சாம்சங் கேலக்சி ஸ்மார்ட்போன். 
வணிகம்

ஆன்லைன் பண்டிகை கால விற்பனை: முதல் நாளில் ரூ.1000 கோடிக்கு ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்த சாம்சங்

செய்திப்பிரிவு

சென்னை: ஆன்லைன் பண்டிகை கால சலுகை விற்பனையின் முதல் நாளில் சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட்போன்களை சாம்சங் நிறுவனம் விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது அந்நிறுவனம். கேலக்சி ரக போன்களின் விலையை 17 முதல் 60 சதவீத வரையிலான தள்ளுபடி விலையில் சாம்சங் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் மின்னணு வணிக விற்பனையில் முன்னணி வகித்து வரும் அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் கடந்த 23-ம் தேதி அன்று பண்டிகை கால சலுகை விற்பனையை தொடங்கி உள்ளன. இரண்டு நிறுவனங்களின் வாடிக்கையாளர்களும் தங்களுக்கு விருப்பமான பொருட்களை தேர்வு செய்து, வாங்கி வருகின்றனர். இந்நிலையில், இந்த தகவலை சாம்சங் நிறுவனம் பகிர்ந்துள்ளது.

“ஆன்லைன் பண்டிகை கால சலுகை விற்பனையின் முதல் நாள் அன்று 1.2 மில்லியனுக்கும் மேற்பட்ட கேலக்சி டிவைஸ்களை விற்பனை செய்துள்ளோம். இது இந்தியாவில் புதிய ரெக்கார்டாக உள்ளது. பெரும்பாலனவர்களின் தேர்வாக சாம்சங் நிறுவனத்தின் கேலக்சி சீரிஸ் போன்கள் உள்ளன. 24 மணி நேரத்தில் சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளோம். இதற்கு காரணம் அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் தள்ளுபடிகள் தான்” என சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கேலக்சி எஸ்20 FE 5ஜி, கேலக்சி எஸ்22 அல்ட்ரா, கேலக்சி எஸ்22, கேலக்சி எம்53, கேலக்சி எம்33, எம்32 பிரைம் எடிஷன் மற்றும் கேலக்சி எம்13 போன்ற ஸ்மார்ட்போன்களின் விலைகளை சாம்சங் நிறுவனம் குறைத்துள்ளது. இதில் ப்ரீமியம் ரக போனான கேலக்சி எஸ்22 சீரிஸும் அடங்கும்.

SCROLL FOR NEXT