புது டெல்லி: தங்கள் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து, விற்பனை செய்யப்படும் மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை உயர்த்தி உள்ளது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம். அது குறித்த விவரத்தை பார்ப்போம். இந்த விலை உயர்வு இருசக்கர வாகன மாடல்களை பொறுத்து அமைந்துள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் டெல்லியை தலைமையிடமாக கொண்டு மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் உற்பத்தி செய்து வரும் பன்னாட்டு நிறுவனமாக இயங்கி வருகிறது. முன்னதாக, ஹீரோ ஹோண்டா என்ற பெயரில் கூட்டு நிறுவனமாக இந்நிறுவனம் இயங்கி வந்தது. பின்னர் இரு நிறுவனங்களும் தனித்தனியே பிரிந்து உற்பத்தி பணிகளை கவனித்து வருகின்றன.
கடந்த ஆகஸ்ட் மாத வாக்கில் சுமார் 4,62,608 வாகனங்களை விற்பனை செய்திருந்தது அந்நிறுவனம். அடுத்த மாதம் எலெக்ட்ரிக் வாகன விற்பனையிலும் ஹீரோ நிறுவனம் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வாகனங்களின் விலை உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் அதிகரித்து வரும் உற்பத்தி செலவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நேற்று (செப்டம்பர் 22) முதல் அமலுக்கு கொண்டு வந்துள்ளதாகவும் நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஹோண்டா மற்றும் டிவிஎஸ் நிறுவனங்களை காட்டிலும் ஹீரோ நிறுவனம் அதிகளவில் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து வரும் பிராண்டாக உள்ளது. 100 முதல் 200 சிசி பைக்குகளை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது. தற்போது ரூ.55,450 முதல் ரூ.1.36 லட்சம் வரையில் (டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை) வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. ஸ்பிளென்டர், எக்ஸ்பல்ஸ், எக்ஸ்ட்ரீம், மேஸ்ட்ரோ உட்பட பல்வேறு வாகனங்கள் இதில் அடங்கும். இந்த வாகனங்களின் விலையில் அதன் மாடலை பொறுத்து அதிகபட்சம் 1000 ரூபாய் வரையில் மாற்றம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.