வணிகம்

வருமான வரி மூலம் ரூ.4.34 லட்சம் கோடி வசூலானது

செய்திப்பிரிவு

சென்னை: வங்கி துறையில் முறையாக வருமான வரி பிடித்தம் (TDS) செய்தல், உரிய காலத்தில் அதை மத்திய அரசின் கணக்கில் செலுத்துதல் ஆகியவை குறித்து வங்கி அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான கருத்தரங்கம், வருமான வரித் துறை சார்பில் சென்னையில் நேற்று நடத்தப்பட்டது.

இந்த விழிப்புணர்வு கருத்தரங்குக்கு தமிழகம், புதுச்சேரி வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் ஆர்.ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். இந்தியாவின் நிகர நேரடி வரி வசூல் இந்த ஆண்டில் இதுவரை ரூ.7 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தைவிட இது 23.33 சதவீதம் அதிகம். மொத்த வரி வசூலில் வருமான வரி பிடித்தத்தின் (TDS) பங்களிப்பு ரூ.4.34 லட்சம் கோடி என்று தெரிவித்த ரிசர்வ் வங்கியின் தமிழகம், புதுச்சேரி மண்டல இயக்குநர் எஸ்எம்என் சுவாமி, இதற்காக வருமான வரித் துறை எடுத்த முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.

வருமான வரித் துறை ஆணையர் சி.திரிபுர சுந்தரி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் பார்த்தா பிரதீம் சென்குப்தா ஆகியோர் பங்கேற்று, வருமான வரி பிடித்தம் செய்வதன் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினர்.

SCROLL FOR NEXT