நாள் ஒன்றுக்கு சுமார் 1612 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதன் மூலம் ஒரே ஆண்டில் தனது சொத்து மதிப்பை கெளதம் அதானி இரட்டிப்பு ஆக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ஐ.ஐ.எஃப்.எல் வெல்த் ஹுரூன் இந்தியா’ என்ற அமைப்பு வெளியிட்டுள்ள இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இது தெரியவந்துள்ளது. அதானி உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இது ப்ளூம்பெர்க் பட்டியலின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பணக்காரர்கள் பட்டியலில் சொத்து மதிப்பில் முகேஷ் அம்பானியை காட்டிலும் சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் கூடுதலாக பெற்று அதானி முதலிடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனியின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு சுமார் 10.94 லட்சம் கோடி ரூபாயாம்.
அதானி குழுமத்தின் பங்குகளின் விலை ஏற்றம் கண்ட காரணத்தால் கடந்த வாரம் உலக அளவில் இரண்டாவது பணக்காரர் என்ற அந்தஸ்தை அதானி எட்டி இருந்தார். அவர் அமேசான் நிறுவனர் பெசோஸை பின்னுக்கு தள்ளி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த ஏப்ரல் வாக்கில் அவர் 100 பில்லியன் டாலர் செல்வந்தர்களுக்கான கிளப்பில் இணைந்திருந்தார். அதே போல அதானி மற்றும் அவரது குடும்பத்தின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் 15.4 முறை என்ற கணக்கில் கூடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள அம்பானி 7.94 லட்சம் கோடி ரூபாயை தனது சொத்து மதிப்பாக வைத்துள்ளார். கடந்த பத்து ஆண்டுகளாக இந்திய செல்வந்தர்களில் முதலிடத்தில் அம்பானி இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.