பிரதிநிதித்துவப்படம் 
வணிகம்

இந்தியாவில் வேலையின்மை 6.8% - ஆய்வுத் தகவல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவில் தற்போது வேலையின்மை 6.8 சதவீதமாக உள்ளது என ஆய்வுத் தகவல் ஒன்று தெரிவிக்கிறது.

இந்தியாவில் ஏராளமானோர் வேலைவாய்ப்பு இன்றி இருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், இந்தியாவில் வேலையின்மை குறித்த புள்ளி விவரங்களை இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) என்ற தனியார் அமைப்பு வெளியிட்டுள்ளது.

அந்த அமைப்பின் நேற்றைய (செப்.20) நிலவரப்படி, இந்தியாவில் வேலையின்மை 6.8 சதவீதமாக உள்ளது. கிராமப்புறங்களில் 6.4 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 7.9 சதவீதமாகவும் இது உள்ளது.

அதோடு, ஆகஸ்ட் மாத நிலவரப்படி, மாநில வாரியாகவும் வேலையின்மை குறித்த புள்ளி விவரங்களை அந்த மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆந்திரப் பிரதேசத்தில் வேலைவாய்ப்பின்மை 6 சதவீதமாகவும், பிஹாரில் 12.8 சதவீதமாகவும், டெல்லியில் 8.2 சதவீதமாகவும், குஜராத்தில் 2.6 சதவீதமாகவும் வேலைவாய்ப்பின்மை உள்ளது. கேரளாவில் 6.1 சதவீதமாக உள்ள வேலைவாய்ப்பின்மை, கர்நாடகாவில் 3.5 சதவீதமாகவும், தெலங்கானாவில் 6.9 சதவீதமாகவும், தமிழ்நாட்டில் 7.2 சதவீதமாகவும் உள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் 3.9 சதவீதமாகவும், மேற்கு வங்கத்தில் 7.4 சதவீதமாகவும், ஜம்மு காஷ்மீரில் 32.8 சதவீதமாகவும், ஜார்க்கண்ட்டில் 17.3 சதவீதமாகவும், ராஜஸ்தானில் 31.4 சதவீதமாகவும் உள்ளது.

நாட்டிலேயே அதிகபட்சமாக ஹரியாணாவில் 37.3 சதவீதமாக உள்ள வேலைவாய்ப்பின்மை, குறைந்தபட்சமாக சத்தீஸ்கரில் 0.4 சதவீதமாக உள்ளது என்று அந்த ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது.

முன்னதாக, மாதாந்திர அடிப்படையிலான வேலையின்மை விகிதத்தின்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் வேலையின்மை 8.28 சதவீதமாக இருந்தது என இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் ஆய்வுத் தகவல் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT