வணிகம்

டாலருக்கு பதில் ரூபாய்-ரூபிளில் வர்த்தகம் - யெஸ் வங்கியில் கணக்கை தொடங்கியது ரஷ்ய வங்கி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததை தொடர்ந்து அந்த நாட்டின்மீது அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் பொருளாதாரத் தடை விதித்தன.

மேலும், ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதற்கும் உலக நாடுகள் தடை விதித்துள்ளன. இந்த நிலையில், அமெரிக்க டாலரில் வர்த்தகம் செய்வதை தவிர்த்து உள்நாட்டு கரன்ஸிகளில் பரஸ்பர வர்த்தகத்தை மேற்கொள்வது குறித்து ரஷ்யாவும் இந்தியாவும் பரிசீலித்து வந்தன. நீண்ட ஆலோசனைக்குப்பிறகு இந்த திட்டத்தை செயல்படுத்தும் முயற்சியில் இருநாடுகளும் களமிறங்கவுள்ளன.

அதன் முதல்படியாக, யெஸ் வங்கி மற்றும் ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் சோஷியல் கமர்சியல் வங்கி (பிஎஸ்சிபி) ரூபாய்-ரூபிள் வழியாக இருதரப்பு வர்த்தகத்தை சாத்தியமாக்கும் முயற்சியில் முதல் முறையாக ஈடுபட்டுள்ளன.

இதுகுறித்து பிஎஸ்சிபி தலைவர் விளாடிமிர் எல் பிரிபிட்கின் கூறும்போது, "இந்தியா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள் தங்களது சொந்த கரன்ஸிகளில் வர்த்தகம் செய்துகொள்ள ஏதுவாக, ரூபாய்-ரூபிள் கணக்கை யெஸ் வங்கியுடன் நாங்கள் தொடங்கியுள்ளோம். இந்தியாவுடன் வர்த்தகம் செய்து வரும் 36 ரஷ்ய நிறுவனங்கள் பரஸ்பரம் ரூபாய்-ரூபிளில் பணம் செலுத்துவதால் நாங்கள் இந்த பரிவர்த்தனையை முன்னெடுத்துள்ளோம்" என்றார்.

இந்த நிலையில், எம்எஃப்கே வங்கி உள்ளிட்ட ரஷ்யாவைச் சேர்ந்த மேலும் 3-4 வங்கிகளிடமிருந்து சிறப்பு கணக்கை தொடங்க விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பதாக யெஸ் வங்கி தெரிவித்துள்ளது. இதுபோல இந்திய வங்கிகளும் 24-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை பெற்றுள்ளன.

SCROLL FOR NEXT