ரூபாய் நோட்டு பிரச்சினை இன்னும் சில மாதங் களுக்கு கூட இந்தியாவின் தலைப்பு செய்தியாக இருக் கலாம். இந்த பிரச்சினையினால் முறைப்படுத்தப்படாத துறையினர் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாக பெரும்பாலான வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் 3.10 லட்சத்துக்கு மேற்பட்ட விவசாயிகளை வங்கி வரம்புக்குள் கொண்டு வந்திருக்கிறது ஹட்சன் அக்ரோ நிறுவனம். விவசாயிகளிடம் இருந்து வாங்கும் பாலுக்கான தொகையினை நேரடியாக வங்கியில் வரவு வைக்கிறது. வங்கியில் பணம் செலுத்தப்படுவதால், விவசாயிகள் தேவைப்பட்டால் மட்டுமே வங்கியில் பணம் எடுக்கிறார்கள். தவிர வங்கி அமைப்புக்குள் வருவதால், அவர்களுக்கு கடன் கிடைப்பதால் அதிக வட்டிக்கு வாங்க வேண்டிய நிலை மாறுகிறது என்பது உள்ளிட்ட பல நன்மைகள் இருக்கின்றன என ஹட்சன் அக்ரோ நிறுவனத்தின் தலைவர் ஆர்.ஜி சந்திரமோகன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: விவசாயிகளிடம் காலை மற்றும் மாலையில் நாங்கள் பால் வாங்குகிறோம். அவர்களுக்கு மாதம் 3 முறை பணத்தை வழங்குகிறோம். பணமாக வழங்கும் போது எங்களுக்கும் பல சிக்கல்கள் இருந்தன. விவசாயிகளுக்கும் பல சிக்கல்கள் இருந்தன. ஆனால் வங்கி முறைக்கு மாறிய போது இருவருக்குமே பலன் கிடைத்தது.
நாங்கள் பத்து நாளைக்கு ஒருமுறை வங்கியில் இருந்து சுமார் ரூ.75 கோடி தொகையை எடுக்க வேண்டும். இந்த தொகையை சரியாக பிரித்து அனைத்து ஊர்களுக்கும் அனுப்ப வேண்டும். தொகையை எண்ணி பாதுகாத்து சரியாக பிரித்து வழங்குவதற்கு அதிக பணியாளர்கள் தேவைப் பட்டார்கள். வங்கித் துறையில் மாற்றங்கள் உருவானதை அடுத்து விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கலாம் என முடிவெடுத்தோம்.
ஆனால் ஆரம்பத்தில் அவர்களிடம் பெரிய வரவேற்பு இல்லை. இதற்கு பல காரணங்கள். காசாக கொடுத்தால் செலவு செய்வோம், என்னால் வங்கிக்கு செல்ல முடியாது. வங்கி இங்கிருந்து அதிக தொலைவு என ஒவ்வொருவரும் ஒரு காரணம் சொன்னார்கள். ஆனாலும் வங்கியில் செலுத்துவதால் அவர்களுக்கு கிடைக்கும் பயன்களை எடுத்து கூறினோம். சில இடங்களில் பாதி நபர்கள் வங்கிக்கு மாறுவார்கள். அவர்களுக்கு கிடைக்கும் அனுபவத்தை தொடர்ந்து மற்றவர்களும் அருகில் இருக்கும் வங்கி கிளையில் கணக்கு தொடங்கினார்கள். இப்போது விவசாயிகளுக்கு கொடுக்கும் தொகை 99.80 சதவீதம் வங்கி மூலமே நடக்கிறது. மீதமுள்ள 0.20 சதவீதம் கூட புதிதாக எங்களிடம் இணைந்தவர்களாக இருப்பார்கள்.
பணத்தை வங்கியில் வரவு வைக்க வேண்டும் எனும் முடிவெடுத்தவுடன் எங்களுடைய தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தினோம். உதாரணத்துக்கு ஒருவர் காலை/மாலை எவ்வளவு பால் ஊற்றினார், அந்த பாலில் எஸ்என்எப்/கொழுப்பு எவ்வளவு இருக்கிறது என்பதை சம்பந்தப்பட்ட நபரின் மொபைலுக்கு தகவல் சென்றுவிடும். பத்து நாளைக்கு ஒருமுறை பாலின் தரத்துக்கு ஏற்ப தொகை கணக்கிட்டு அவர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும்.
ரொக்கமாக பணம் வழங்கும் நாள் அன்று சம்பந்தப்பட்ட நபரே நேரடியாக வந்து பால் ஊற்றிவிட்டு, பணம் வாங்க வேண்டும். ஆனால் இப்போது வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுவதால், அவர் நேரடியாக வர வேண்டிய அவசியம் இல்லை. கையில் ரொக்கமாக இருந்தால் எதாவது செலவு செய்து விடுகின்றனர். ஆனால் வங்கி இருக்கும் போது தேவைப்பட்டால் மட்டுமே எடுக்கின்றனர். சில விவசாயிகளுக்கு மற்ற இதர வருமானங்கள் இருப்பதால் பால் மூலம் கிடைக்கும் வருமானத்தை முக்கியமான செலவுகளுக்கு மட்டும் எடுக்கின்றனர். தவிர வங்கியில் பண வரத்து இருப்பதால் குறைந்தவட்டியில் கடன் கிடைக்கிறது. சந்தையில் அதிக வட்டிக்கு வாங்க தேவையில்லை.
சில சமயங்களில் அதிக வட்டிக்கு கடன் வாங்கி, பால் மூலம் கிடைக்கும் வருமானத்தை கந்து வட்டிகாரரே கையாளும் சூழலும் முன்பு இருந்தது. கந்து வட்டிகாரர் எடுத்துக்கொண்டது போக மீதம்தான் விவசாயிகளுக்கு. அவர்கள் சொல்வதுதான் கணக்கு. இந்த அந்த பிரச்சினை விவசாயிகளுக்கு இல்லை.
வங்கி முறைக்கு மாறச்சொன்ன போது பல சிக்கல்கள் இருந்தன. ஆனால் நான்கைந்து மாதங்களில் அனைவரையும் இந்த முறைக்கு கொண்டுவந்துவிட்டோம். கடந்த இரு வருடங்களாக இந்த முறையில்தான் அவர்களுக்கு பணம் செல்கிறது.
இதுதவிர 3,000 ஒப்பந்த வாகனங்கள் எங்களுக்காக இயங்குகின்றன. அவர்களுக்கும் பெட்ரோ கார்டுகள் கொடுத்து விட்டோம். அதை பயன்படுத்தி எரிபொருள் நிரப்பி கொள்ளலாம். அதனை முன்பணமாக நாங்கள் கொடுத்து, பத்து நாட்களுக்கு ஒருமுறை செட்டில் செய்யும் போது பிடித்துக்கொள்ளுவோம். மத்திய அரசின் தற்போதைய நடவடிக்கையால் எங்களுடைய விவசாயிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் பெரிதாக பாதிப்படையவில்லை.
நாங்கள் அப்போது வங்கி முறைக்கு மாறச்சொன்ன போது மிகவும் சிரமப்பட்டனர். ஆனால் இப்போது கையில் ரொக்கமாக கொடுப்பதாக சொன்னால் வேண்டாம் என்று சொல்வார்கள். இப்போது நாங்கள் பணத்தை கையால் தொடுவதில்லை என்று சந்திரமோகன் நம்மிடம் கூறினார்.
karthikeyan.v@thehindutamil.co.in