வணிகம்

அமெரிக்க தேர்தல் கருத்து கணிப்பு: இந்திய பங்குச் சந்தை கடும் சரிவு

பிடிஐ

அமெரிக்க தேர்தல் கருத்து கணிப்புகளில் டொனால்ட் ட்ரம்ப் முந்துவதால் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருக்கின்றனர். இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தையின் முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி ஆகியவை ஒரு சதவீதத்துக்கும் மேல் சரிந்தன. சந்தைக்கு சாதகமான ஹிலாரி கிளிண்டனை விட ட்ரம்ப் முந்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 349 புள்ளிகள் சரிந்து 27527 புள்ளியில் முடிவடைந்தது. அதேபோல நிப்டி 112 புள்ளிகள் சரிந்து 8514 புள்ளியில் முடிவடைந்தது. அதேபோல மிட்கேப் குறியீடு 2 சதவீதமும், ஸ்மால்கேப் குறியீடு 1.8 சதவீதமும் சரிவடைந்தன.

துறைவாரியாக பார்க்கும் போது ஆயில் அண்ட் கேஸ் குறியீடு 2.76 சதவீதம் சரிந்தது. அதனை தொடர்ந்து ரியால்டி குறியீடு 2.18 சதவீதமும், ஹெல்த்கேர் குறியீடு 2.15 சதவீதமும், பொதுத்துறை குறியீடு 2.05 சதவீதமும் சரிந்தன.

சென்செக்ஸ் பங்குகளில் ஓஎன்ஜிசி (4.1), டாடா மோட்டார்ஸ் (3.19%), ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (2.75%), சன் பார்மா (2.61%) மற்றும் ரிலையன்ஸ் (2.31%) சதவீதம் சரிந்தன. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 பங்குகளில் 4 பங்குகள் மட்டுமே உயர்ந்து முடிந்தன. மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, என்டிபிசி, ஹெச்யூஎல் மற்றும் ஆக்ஸிஸ் வங்கி ஆகிய பங்குகள் மட்டுமே உயர்ந்து முடிந்தன.

சர்வதேச சந்தை நிலவரம்

புதன்கிழமை உலக சந்தைகள், டாலர் மற்றும் கச்சா எண்ணெய் உயர்ந்தன. ஆசிய பங்குசந்தைகளில் ஏழு வாரங்களில் இல்லாத அளவுக்கு சரிவு காணப்பட்டன. நவம்பர் 8-ம் தேதி அமெரிக்காவில் ஓட்டுப்பதிவு நடக்க இருக்கிறது. ஓட்டுப்பதிவுக்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு கருத்து கணிப்பில் ட்ரம்ப் முந்துவதை முதலீட்டாளர்கள் விரும்பவில்லை.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் ரூபாய் மதிப்பு நிலையாக இருந்தது. வர்த்தகத்தின் முடிவில் ஒரு டாலர் 66.71 ரூபாயாக முடிவடைந்தது. வர்த்தகத்தின் இடையே ஒரு டாலர் 66.86 ரூபாய் வரை சரிந்தது.

SCROLL FOR NEXT