மும்பை: மும்பையில் தொழிலதிபர்கள் கூட்டம், லகு உத்யோக் பாரதி ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஆகியவற்றில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு, மாநில அரசுகள், மாநில அரசு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை உள்ளது. தனியார் நிறுவனங்கள் தாங்கள் பெறும் சரக்குகள் மற்றும் சேவைகளுக்காக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பணம் செலுத்த வேண்டியுள்ளது. சிறு தொழில்கள்தான், நமது நாட்டு பொருளாதாரத்தின் முது கெலும்பு. அவர்களுக்கு செல்ல வேண்டிய பணம் உரிய நேரத்தில் செல்ல வேண்டும்.
தனியார் துறைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள், சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை 45 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். மத்திய அரசு துறைகள், மத்திய பொது துறை நிறுவனங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை 90 நாட்களில் செலுத்துவதை உறுதி செய்ய, மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். மாநில அரசுகளும், பொதுத்துறை நிறுவனங்களும், சிறு தொழில் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை சரியான நேரத்தில் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.