வணிகம்

ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கும் ஒப்பந்தத்திற்கு பங்குதாரர்கள் ஒப்புதல்

செய்திப்பிரிவு

சான் பிரான்சிஸ்கோ: ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கும் ஒப்பந்தத்திற்கு ஆதரவாக ட்விட்டரின் பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், ட்விட்டர் சமூக வலைத்தளத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்குவதாக சில மாதங்கள் முன் அறிவித்ததையடுத்து ட்விட்டர் நிர்வாகக் குழு மற்றும் மஸ்க் தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த ஒப்பந்தம் உறுதியானதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

எனினும் ட்விட்டருடனான தனது ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் ஜூலை மாதம் அறிவித்தார். இதற்கு காரணம் ட்விட்டர் கூறுவதை விட 4 மடங்கு போலி கணக்குகள் இருப்பதாகவும், தேவையற்ற செலவுகளால் லாபமற்ற நிறுவனமாக ட்விட்டர் இருப்பதாகவும் மஸ்க் கூறியிருந்தார். தொடர்ந்து ட்விட்டர் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறவும் செய்தார் மஸ்க். போலி கணக்குகள் பற்றிய தகவல்களை நிறுவனம் வழங்கத் தவறியதால், ட்விட்டரை வாங்குவதற்கான தனது 44 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை நிறுத்துவதாக வெளிப்படையாக மஸ்க் அறிவிக்க ட்விட்டரின் பங்குகள் 7% சரிந்த நிகழ்வுகள் நடந்தன.

அதேநேரம், ஒப்பந்தத்தை மஸ்க் தன்னிச்சையாக ரத்து செய்ய முடியாது என்றும் ட்விட்டர் நிறுவன பங்குதாரர்கள் முடிவின்படி நடக்கப்போவதாக ட்விட்டர் நிர்வாகம் சர்ச்சைகளுக்கு பதில் தெரிவித்தது. இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கும் சென்றது.

இதற்கிடையே, ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கும் ஒப்பந்தத்திற்கு ஆதரவாக ட்விட்டரின் பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ட்விட்டர் நிறுவன தலைமையகத்தில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. வாக்கெடுப்பின்மூலம் மஸ்க் முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. எனினும் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் நீதிமன்றம் மூலமே இந்த விவகாரத்தில் தீர்வு எட்டப்படலாம் என்று கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT