புதுடெல்லி: வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டும் நிலையில், இந்திய நிறுவனங்கள் தயங்குவது ஏன் என இந்திய தொழில் துறையினரிடம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹீரோ மைண்ட்மைன் அமைப்பின் சார்பில் நேற்று நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்ட நிர்மலா சீதாராமன், உற்பத்தித் துறையில் முதலீடு செய்ய இந்திய நிறுவனங்கள் காட்டி வரும் தயக்கம் குறித்து கேள்வி எழுப்பினார்.
“மத்திய அரசு, இந்தியாவில் தொழில் வாய்ப்புகளை ஊக்குவிக்கும் வகையில் திட்டங்களை அறிவித்து வருகிறது. இவற்றால் ஈர்க்கப்பட்டு பல வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவிலிருந்து வெளியேறி இந்தியாவை நோக்கி வருகின்றன. ஆனால், இந்தியாவில் இருக்கும் நிறுவனங்கள் உற்பத்தி துறையில் முதலீடு செய்ய தயங்குகின்றன” என்று அவர் கூறினார்.
மேலும், அவர் “அனுமன்போல உங்களுக்கே உங்கள் பலம் மீது நம்பிக்கை இல்லையா? வேறுவொருவர் வந்துதான் உங்கள் பலத்தைப் பற்றி சொல்ல வேண்டுமா?” என்று கேட்டார். இந்தியா மிக முக்கியமான தருணத்தில் இருப்பதாகவும் இதை நாம் தவறவிடமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொருளாதார வளர்ச்சி சார்ந்து இந்தியா முன்னெடுத்து வரும் முயற்சிகள் குறித்து அவர்கூறுகையில், பல நாடுகள் இந்தியாவுடன் ரூபாயில் வர்த்தகம் மேற்கொள்ள விருப்பம் தெரிவிப்பதாக குறிப்பிட்டார். ஏற்றுமதி - இறக்குமதி தொடர்பான பணப்பரிவர்த்தனையை ரூபாயில் மேற்கொள்வது தொடர்பாக ரிசர்வ் வங்கியின் முன்னெடுப்பை அவர் பாராட்டினார்.
தற்போது இந்தியா அதன் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை பெரும்பான்மையாக டாலரில் மேற்கொண்டு வருகிறது. இதனால், இறக்குமதி அதிகமாகும் சமயத்தில் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்துவிடுகிறது. மேலும், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சி அடைகிறது. இது தவிர்த்து, அமெரிக்காவால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட ரஷ்யா, ஈரான் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா வர்த்தகத்தில் ஈடுபடுவதும் சிக்கல் நிறைந்ததாக உள்ளது.
இந்நிலையில், வோஸ்ட்ரோ கணக்குகள் திறப்பதன் மூலம்வெளிநாடுகளுடன் ரூபாயில் வர்த்தகம் செய்ய முடியும் என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டது. அதையடுத்து இந்திய வங்கிகள் வோஸ்ட்ரோ கணக்குகளை திறப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளன.
வோஸ்ட்ரோ கணக்கு மூலம் இந்திய இறக்குமதியாளர்களும் ஏற்றுமதியாளர்களும் டாலருக்குப் பதிலாக ரூபாயிலேயே வர்த்தகம் செய்ய முடியும்.