வணிகம்

கொடிசியாவில் சர்வதேச வார்ப்பட தொழில் கண்காட்சி: நாளை தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது

செய்திப்பிரிவு

கோவை மாவட்டத்தில் செயல்படும் வார்ப்பட தொழில் மேம்பாட்டு மையம் (எப்டிஎப்) சார்பில், வார்ப்பட தொழிலுக்கான சர்வதேச கண்காட்சி அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் வரும் 15-ல் தொடங்குகிறது.

இதுதொடர்பாக, எப்டிஎப் துணைத் தலைவர் கிருஷ்ணா சாம்ராஜ், ஒருங்கிணைப்பு குழு தலைவர் பழனிசாமி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் 600 வார்ப்பட தொழிற் சாலைகள் இயங்கி வருகின்றன.

இவற்றின் மூலம் ரூ.15,000 கோடிக்கும் அதிகமான வர்த்தகம் நடக்கிறது.

நாட்டில் தயாரிக்கப்படும் உற்பத்திப் பிரிவு சார்ந்த அனைத்து பொருட்களிலும் கோவை வார்ப்படதொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

வார்ப்பட தொழில்நுட்பங்கள் குறித்தும் அதன் உற்பத்தி மற்றும் தரத்தை அதிகரிக்கும் நோக்கில் தெற்கு ஆசியாவில் முதல் முறையாக வார்ப்படம் மற்றும் அத்தொழில் சார்ந்த உபகரணங்கள் குறித்த சர்வதேச கண்காட்சி கோவையில் வரும் 15-ல் தொடங்கி 17-ம் தேதி வரை நடக்கிறது.

180 முன்னணி நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்க உள்ளன.

கோவை மட்டுமின்றி ஜெர்மனி, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் தொழில் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. மூன்று நாட்களும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கண்காட்சி நடைபெறும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT