வங்கிகள், பேருந்துகள், நியாய விலைக்கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதால், மக்கள் பாதிக்கப்படுகின்றனர்
வங்கிகள், பேருந்துகள், நியாய விலைக்கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதால், மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகர்வோர் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
மத்திய அரசின் சார்பில், அவ்வப்போது புதிய ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் தயாரிக்கப்பட்டு, ரிசர்வ் வங்கியின் மூலம் வெளியிடப்பட்டு நாடு முழுவதும் புழக்கத்தில் விடப்படுகின்றன. கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் ரிசர்வ் வங்கியின் சார்பில் புதியதாக 10 ரூபாய் நாணயங்கள் அறிமுகப்படுத்தப் பட்டன.
நாட்டின் மற்ற மாநிலங்களில் 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் இருந்தாலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முழுமையான பயன்பாட்டுக்கு வரவில்லை.
சாமானிய மக்கள் தங்களிடம் உள்ள 10 ரூபாய் நாணயங்களை கடைகளிலோ, பேருந்துகளிலோ, வங்கிகளிலோ அளித்தால், அவை வாங்கப்படுவதில்லை. அரசால் அங்கீகரிக்கப்பட்ட இந்த 10 ரூபாய் நாணயங்களை அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களே ஏற்றுக் கொள்வதில்லை.
இதுதொடர்பாக கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பின் செயலர் நா.லோகு கூறும்போது, ‘‘சாமானிய மக்களிடம் 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன. ஆனால், அந்த நாணயங்களை அரசு நிறுவனங்கள், வர்த்தக அமைப்புகள் ஏற்பதில்லை. கோவை மட்டுமல்ல, மேற்கு மண்டல மாவட்டங்களில் இந்தச் சூழல் நிலவுகிறது.
பயணச்சீட்டு வாங்குவதற்காக அரசுப் பேருந்துகளில் அளித்தாலோ, பொருட்கள் வாங்குவதற்காக நியாய விலைக்கடைகளில் அளித்தாலோ, ஆவின் பால் விற்பனை நிறுவனங்கள், வங்கிகள் என அரசு சார்ந்த எந்த இடத்திலும் 10 ரூபாய் நாணயங்கள் வாங்குவதில்லை. ஏன் வாங்க மறுக்கிறீர்கள் என மக்கள் கேட்டால் அவர்கள் உரிய பதில் தெரிவிப்பதில்லை.
அரசு சார்ந்த நிறுவனங்களே வாங்காத சூழலில், தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், மளிகைக்கடைகள், பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட வர்த்தக அமைப்புகள் என தனியார் துறை நிறுவனங்களும் வாங்குவதில்லை. இதனால் பாதிக்கப்படுவது சாமானிய மக்கள் தான்.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் அரசு நிறுவனங்கள் மீது ரிசர்வ் வங்கி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி, மாவட்ட முன்னோடி வங்கிகளில் புகார் அளித்தாலும் எந்த பலனும் இல்லை. எனவே மக்களின் சிரமங்களை தவிர்க்க, ஒரு முகாம் அமைத்து புழக்கத்தில் விடப்பட்டு மக்களிடம் உள்ள அனைத்து 10 ரூபாய் நாணயங்களையும் அரசு உடனடியாக திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.
கோவை மாவட்ட நிர்வாகத்தினர் கூறும்போது, ‘‘நியாய விலைக்கடைகள், பேருந்துகள், ஆவின் விற்பனையகங்கள் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை. 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் அந்த துறையின் மாவட்ட அலுவலரிடம் மக்கள் புகார் அளிக்கலாம்,’’ என்றனர்.
முன்னோடி வங்கி: கோவை மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கெளசல்யா தேவி கூறும்போது, ‘‘ 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன. அதை வாங்க எந்த தடையும் விதிக்கப்படவில்லை. 10 ரூபாய் நாணயங்கள் வந்தால் வங்கிகளில் அவற்றை வாங்கிக் கொள்ளலாம் என முன்னரே அறிவுறுத்தப்பட்டுள் ளது.
சமீபத்தில் கோவைக்கு வந்த ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநரும், 10 ரூபாய் நாணயங்களை பணப் பரிமாற்றத்துக்கு பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தியுள்ளார். வங்கிகளில் 10 ரூபாய் நாணயங்கள் வாங்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட வங்கிகளின் மண்டல அலுவலகங்களில் புகார் அளிக்கலாம்,’’ என்றார்.