500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதன் காரணமாக நேற்று பங்குச்சந்தை சரிவை கண்டது. நேற்றைய வர்த்தகத்தில் மும்பைச் பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 338.61 புள்ளிகள் சரிந்து 27252.53 புள்ளிகளுடன் நிறைவடைந்தது
தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 112 புள்ளிகள் சரிந்து 8432 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. பிஎஸ்இ ஸ்மால்கேப் குறியீடு 2.78 சதவீதம் சரிவையும் மிட்கேப் குறியீடு 2.03 சதவீதம் சரிவையும் கண்டது.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் சர்வதேச சந்தைகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஹிலாரி வெற்றி பெறுவார் என்று கருத்து கணிப்புகள் கூறி வந்த நிலையில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளதால் சர்வதேச பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி காணப்பட்டது. இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்தது. இது மட்டுமல்லாமல் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததே பங்குச் சந்தை சரிவுக்குக் காரணம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு அதிகபட்சமாக 1,689 புள்ளிகள் சரிந்தன. நிப்டி குறியீடு 541 புள்ளிகள் சரிந்தன. இதனால் முதலீட்டாளர்களுக்கு ரூ.6 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. பின்பு வர்த்தக நேர இறுதியில் பங்குச்சந்தை மீண்டன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டில் ரியல் எஸ்டேட் குறியீடு அதிகபட்ச சரிவைக் கண்டது. இந்தத் துறை குறியீடு 10.23 சதவீத சரிவைக் கண்டது. மேலும் நுகர்வோர் பொருட்கள் குறியீடு 4.18 சதவீதமும், ஐடி குறியீடு 3.28 சதவீதமும் சரிவைக் கண்டன. மாறாக ஹெல்த்கேர் குறியீடு 1.48 சதவீதமும் வங்கி குறியீடு 0.18 சதவீதமும் பொதுத்துறை நிறுவனங்கள் குறியீடு 0.1 சதவீதமும் உயர்வை கண்டன.
மும்பை பங்குச் சந்தையில் அதிகபட்சமாக டிசிஎஸ் நிறுவனத்தின் பங்கு 4.93 சதவீதம் சரிவைக் கண்டது. மேலும் ஹீரோமோட்டார் கார்ப் நிறுவனத்தின் பங்கு 3.97 சதவீதமும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் பங்கு 3.43 சதவீதமும் சரிவைக் கண்டன. மாறாக டாக்டர் ரெட்டீஸ் நிறுவனத்தின் பங்கு 5.04 சதவீதம் உயர்வை கண்டது. மேலும் சன்பார்மா நிறுவனத்தின் பங்கு 4 சதவீதமும் எஸ்பிஐ பங்கு 2.83 சதவீதமும் உயர்வைக் கண்டன.
அந்நிய செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் சரிவைக் கண்டது.