வணிகம்

காரில் சீட் பெல்ட் அணியாவிட்டால் அலாரம் அடிப்பதை நிறுத்தும் கருவியை விற்க அமேசானுக்கு தடை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: காரில் சீட் பெல்ட் அணியாவிட்டால் அலாரம் அடிப்பதை நிறுத்தும் கருவியை விற்பனை செய்ய வேண்டாம் என்று அமேசான் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

தற்போதுள்ள கார்களில் சீட் பெல்ட் அணியாவிட்டால் எச்சரிக்கை மணி அல்லது பீப் அலாரம் ஒலித்துக் கொண்டே இருக்கும். சீட் பெல்ட்டின் மெட்டல் கிளிப் பகுதி, பெல்ட்டில் லாக் ஆனால் மட்டுமே எச்சரிக்கை மணி அடிப்பது நிற்கும். இந்நிலையில் கார்களில் இந்த எச்சரிக்கை மணியை ஏமாற்றும் வகையில் மெட்டல் கிளிப் என்று அழைக்கப்படும் கருவியை மட்டும் அமேசான் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

இந்த மெட்டல் கிளிப்பை மட்டும் வாங்கி, சீட் பெல்ட் போடும் இடத்தில் வைத்துவிட்டால் சீட் பெல்ட் அணியப்பட்டதாக எண்ணி அலாரம் அடிப்பது நின்றுவிடுகிறது. உண்மையில் சீட் பெல்ட் அணிவதைத் தவிர்க்கவே இந்த கருவி பயன்படுகிறது.

ஆனால், காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிந்திருப்பது கட்டாயம் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. அண்மையில் நடந்த சாலை விபத்தில் டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி உயிரிழந்தார். இவரின் உயிரிழப்புக்கு காரில் சீட் பெல்ட் அணியாமல் இருந்ததே முக்கியக் காரணமாகத் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று கூறியதாவது:

காரில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிவதை மத்திய அரசு கட்டாயப்படுத்தி வருகிறது.ஆனால், சீட் பெல்ட் அணியாவிட்டால் காரில் வரும் அலாரத்தை நிறுத்த மெட்டல் கிளிப் அமேசான் நிறுவனத்தில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரியவந்துள்ளது.

அந்த கிளிப் மூலம் சீட் பெல்ட் அணியாமல் வரும் அலாரத்தை நிறுத்த முடியும். சீட் பெல்ட் அணிவதைத் தவிர்க்க மக்கள் இதை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதனால் காரில் பயணிப்பவர்களுக்குத்தான் ஆபத்து. காரில் செல்பவர்கள் தங்கள் பாதுகாப்புக்காக சீட் பெல்ட் அணிய வேண்டும்.

அந்த மெட்டல் கிளிப் கருவியை விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும் என்று அமேசான் நிறுவனத்துக்கு கடிதம் எழுதியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

சீட் பெல்ட் அணிவதைத் தவிர்க்க மக்கள் இதை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதனால் காரில் பயணிப்பவர்களுக்குத்தான் ஆபத்து. காரில் செல்பவர்கள் தங்கள் பாதுகாப்புக்காக சீட் பெல்ட் அணிய வேண்டும்.

SCROLL FOR NEXT