வணிகம்

உற்பத்தி பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் அரிசி ஏற்றுமதிக்கு 20 சதவீதம் வரி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவிலிருந்து அரிசி ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு 20 சதவீத வரி விதித்துள்ளது.

அரிசி அதிக அளவில் உற்பத்தி செய்யும் மேற்கு வங்கம், பிஹார், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மழைப்பொழிவு குறைந்துள்ளது. அதன் விளைவாக, வரும் மாதங்களில் அரசி உற்பத்தி பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் உள்நாட்டுத் தேவை பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கில் அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு வரி விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு, இந்தியாவில் கோதுமை விலை அதிகரித்ததையடுத்து மத்திய அரசு கோதுமை ஏற்றுமதிக்கு தடைவிதித்தது. இந்நிலையில், அரிசி உற்பத்தி பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அரிசி ஏற்றுமதிக்கு 20 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. புழுங்கல் அரிசி மற்றும் பாசுமதி அரிசிக்கு ஏற்றுமதி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வரி விதிப்பால், வரும் மாதங்களில் இந்தியாவின் அரிசிஏற்றுமதி 25 சதவீதம் அளவில் குறையும் என்று அரிசி ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

உலக அளவில் அரிசி ஏற்றுமதியில் இந்தியா 40 சதவீதம் பங்கு வகிக்கிறது. தற்போதைய வரி விதிப்பால் இறக்குமதியாளர்கள் இந்தியாவுக்குப் பதிலாக தாய்லாந்து, வியட்நாம், பாகிஸ்தான் , மியான்மர் ஆகிய நாடுகளிலிருந்து அதிக அளவில் அரிசியை இறக்குமதி செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

2021-ல் இந்தியாவின் அரிசி ஏற்றுமதி 2.15 கோடி டன்னாக உயர்ந்தது. இந்தியா 150 நாடுகளுக்கு அரிசியை ஏற்றுமதி செய்கிறது. இந்நிலையில் இந்த ஏற்றுமதி குறையும்பட்சத்தில் சர்வதேச அளவில் உணவு சார்ந்த பணவீக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT