புதுடெல்லி: ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி 2 சதவீதத்திலிருந்து 13% ஆக அதிகரித்துள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தெரிவித்தார்.
சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான கவுன்சில் (ஐசிஆர்ஐஇஆர்) ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பங்கேற்ற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
கடந்த சில மாதங்களாக இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக, ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெயின் அளவு கணிசமான அளவிற்கு உயர்ந்துள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்ய எண்ணெயின் பங்கு 2 சதவீதத்திலிருந்து 13 சதவீதமாக உயர்ந்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கிய சில மாதங்களிலேயே இது நிகழ்ந்துள்ளது.
கச்சா எண்ணெயை தள்ளுபடி விலையில் வழங்க ரஷ்யா தயாராக இருப்பதாக அறிவித்தது. இதனை, நாட்டின் வளர்ச்சிக்கான சிறந்த வாய்ப்பாக கருதிய பிரதமர் மோடி, அந்த நாட்டிலிருந்து எண்ணெயை இறக்குமதி செய்ய முடிவெடுத்தார். இந்த துணிச்சலுக்காக பிரதமரை பாராட்ட வேண்டும். இதன் மூலம், மொத்த இறக்குமதியில் வெறும் 2 சதவீதமாக மட்டுமே இருந்த ரஷ்யாவின் பங்களிப்பு தற்போது 13 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. மேலும், பிரதமரின் இந்த சாமர்த்தியமான முடிவால் இறக்குமதி செலவினம் கணிசமாக குறைய பெரிதும் உதவியுள்ளது.
வரலாற்று ரீதியாக பார்க்கும்போது, இந்தியாவுக்கான புதைபடிவ எரிபொருளின் இறக்குமதிக்கான முக்கிய ஆதார சந்தையாக ரஷ்யா இல்லை. இருப்பினும், அந்த நாடு அறிவித்த சலுகையை பயன்படுத்தி இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்வது சில மேற்கத்திய நாடுகளிடையே பதற்றத்தையும் அதிருப்தியையும் உருவாக்கியுள்ளது.
ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டதையடுத்து, உலக நாடுகள் கச்சா எண்ணெய், எரிவாயுவை பெறுவதற்கு சுயமான வழிமுறைகளை ஆராய்ந்து வருகின்றன. உலக நாடுகளுடன் நமது உறவை சுமுகமாக பேணி வரும் சூழ்நிலையில், ஜப்பான் தற்போது ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை பெற்று வருவதன் பாணியில் இந்தியாவும் அதே வழிமுறையை பின்பற்றியுள்ளது.
ரஷ்யாவிலிருந்து தள்ளுபடி விலையில் எண்ணெய் இறக்குமதி செய்வது பணவீக்க மேலாண்மையின் ஒரு பகுதியாகும்.இவ்வாறு அவர் கூறினார்.
உலகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதியில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாவது மிகப்பெரிய நாடாக உள்ளது. ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கியதையடுத்து சர்வதேச சந்தையில் கச்சாஎண்ணெய் விலை புதிய உச்சத்தை தொட்டது.
கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி 47 லட்சம் பேரல்களாக இருந்தது. இதில் ரஷ்ய எண்ணெய் பங்கு 9 லட்சம் பேரலாக அதிகரித்தது.
கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவுக்கு அதிக அளவில் எண்ணெய் விநியோகம் செய்ததில் 24% பங்களிப்புடன் ரஷ்யா முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து, 21% பங்குடன் இராக் இரண்டாவது இடத்திலும், அதனைத் தொடர்ந்து 15% பங்குடன் சவூதி அரேபியா மூன்றாவது இடத்திலும் உள்ளதாக ஒபெக் தெரிவித்துள்ளது.