ஆந்திர மாநிலம் சிட்டியில் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத் தும் கருவிகள் தயாரிக்கும் ஆலையை பெல்ஜியத்தை சேர்ந்த வெர்மெய்ர்ன் என்ற நிறுவனம் தொடங்கியுள்ளது. ரூ.40 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ள இந்த ஆலை ஆண்டுக்கு 14 ஆயிரம் உபகரணங்களைத் தயாரிக்கும் திறன் கொண்டதாகும்.
75 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆலையில் மாற்றுத் திறனாளிகளுக்குப் பயன்படக் கூடிய கருவிகள் தயாரிக்கப்படும்.
இந்நிறுவனம் மருத்துவம் சார்ந்த கருவிகள் தயாரிப்பில் சர்வதேச அளவில் முன்னணியில் உள்ளது. இந்தியாவில் இந் நிறுவனம் தொடங்கும் முதலாவது ஆலை இதுவாகும். இந்த ஆலையை நேற்று ஆந்திர மாநில சுகாதார அமைச்சர் காமினெனி னிவாஸ் தொடங்கி வைத்தார்.
இந்த ஆலை 2020-ம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் சக்கர நாற்காலிகளைத் தயாரிக்கும் திறன் கொண்டதாக உயரும். மேலும் 25 ஆயிரம் மருத்துவமனை படுக்கைகளை தயாரிக்கும் என்றும் நிறுவனத் தின் தலைமைச் செயல் அதிகாரி பாட்ரிக் வெர்மெய்ர்ன் கூறினார்.
கிராமப்புற மக்களுக்கு உதவும் வகையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை அமைக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.