வணிகம்

வெளிமாநில வியாபாரிகள் வராததால் வெறிச்சோடிய ஈரோடு ஜவுளிச்சந்தை

செய்திப்பிரிவு

ஈரோடு: வெளிமாநில வியாபாரிகள் வராததால், ஈரோடு ஜவுளிச்சந்தை நேற்று வெறிச்சோடிக் காணப்பட்டது.

ஈரோடு கனி ஜவுளிச்சந்தை, ஈஸ்வரன் கோயில் வீதி, பன்னீர்செல்வம் பூங்கா, திருவேங்கடசாமி வீதி ஆகிய பகுதிகளில் வாரம்தோறும் திங்கள்கிழமை மாலையில் தொடங்கி செவ்வாய்க்கிழமை வரை ஜவுளி மொத்த விற்பனை நடப்பது வழக்கம்.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், இந்த சந்தைக்கு வரும் வியாபாரிகள் மொத்தமாக ஜவுளிக் கொள்முதல் செய்வர்.

ஓணம் பண்டிகையையொட்டி கேரள வியாபாரிகள் வருகையால், கடந்த வாரம் மொத்த ஜவுளி விற்பனை கணிசமாக அதிகரித்தது. இந்நிலையில் நேற்று நடந்த ஜவுளிச்சந்தையில், வெளி மாநில வியாபாரிகள் வராததால் வெறிச்சோடிக் காணப்பட்டது.

இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது: ஓணம் பண்டிகைக்காக உள்ளூர் விற்பனையில் இருந்ததால் கேரள வியாபாரிகள் வரவில்லை, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்வதால், அவர்களும் ஜவுளிக் கொள்முதலுக்கு வரவில்லை.

இதனால், மொத்த ஜவுளி வியாபாரம் 10 சதவீதம் கூட நடக்கவில்லை, என்றனர்.

SCROLL FOR NEXT