வணிகம்

இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 8.2% உயர்ந்து 620.7 பில்லியன் டாலராக அதிகரிப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்களுக்கான துறையின் வெளிநாட்டு கடன் நிர்வாகப் பிரிவு இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 2021-22 குறித்த 28-வது நிலைமை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதன்படி, 2021 மார்ச் இறுதியில், 573.7 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இந்தியாவின் வெளிநாட்டுக்கடன், 2022 மார்ச் இறுதியில் 8.2 சதவீதம் அதிகரித்து 620.7 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.

உள்நாட்டு மொத்த உற்பத்தி விகிதத்தில் வெளிநாட்டுக்கடன் அளவு ஓராண்டுக்கு முன் 21.2 சதவீதம் என்பதிலிருந்து கணிசமாக குறைந்து 2022 மார்ச் இறுதியில், 19.9 சதவீதம் ஆகியுள்ளது. அன்னிய செலாவணி கையிருப்பு, விகிதத்தில் ஓராண்டுக்கு முன் 100.6 சதவீதம் என்பதை விட, 2022 மார்ச் இறுதியில் 97.8 சதவீதம் என வெளிநாட்டுக்கடன் லேசாக குறைந்துள்ளது.

நீண்டகால கடன் அளவு 499.1 பில்லியன் அமெரிக்க டாலர் என்றும், குறுகிய காலக்கடன் அளவு 121.7 பில்லியன் அமெரிக்க டாலர் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு மொத்தக்கடனில் 90 சதவீதம் வணிகக் கடன்கள், வெளிநாடு வாழ் இந்தியர்களின் வைப்புத்தொகைகள் குறைந்தகால வர்த்தகக்கடன், பலவகை கடன்கள் ஆகியவையாகும்.

SCROLL FOR NEXT