அமெரிக்காவின் மிகப் பெரும் சில்லறை வர்த்தக சங்கிலித் தொடர் நிறுவனமான வால்மார்ட் இந்தியாவில் தனது செயல்பாட்டைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக நிறுவனங்களுக்கு மட்டும் விற்பனை செய்ய (பி2பி) முடிவு செய்துள்ளது. அத்துடன் மின்னணு வர்த்தகத்திலும் (இ-காமர்ஸ்) இறங்கத் திட்டமிட்டுள்ளது.
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான சூழலை ஆராய்ந்து பிறகு அதில் இறங்குவது குறித்து முடிவு செய்யப் போவதாக இந்தியப் பிரிவின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) கிரிஷ் ஐயர் குறிப்பிட்டார்.
ஜூலை மாதத்தில் செயல் பாடுகளைத் தொடங்க திட்டமிடப் பட்டுள்ளது. முதல் கட்டமாகத் தொடங்கும் 2 நிறுவனங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்தே அடுத்த கட்ட விரிவாக்கம் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.
அந்நிய நிறுவனங்கள் சில்லறை வர்த்தகத்தில் நேரடியாக ஈடுபட அனுமதிக்காத நிலையில், ஆன்லைன் வர்த்தகத்தில் வால்மார்ட் ஈடுபடுமா என்று கேட்டதற்கு கிரிஷ் ஐயர் பதிலளிக்க மறுத்துவிட்.டார்.
பன்முக இலச்சினை வர்த்தகத்தில் (மல்டி பிராண்ட்) ஈடுபட இந்தியாவிலுள்ள உள்நாட்டு நிறுவனத்துடன் கூட்டு சேரும் திட்டம் வால்மார்ட் வசம் உள்ளதா என்ற கேட்டதற்கு, இப்போது இந்தியாவில் நிலவும் சூழலை தொடர்ந்து பரிசீலித்து வருகிறோம்.
இந்தியாவிற்குள் வால்மார்ட் வரும்போது மதிப்பையும் கொண்டு வருகிறது என்பதை அரசுக்கு உணர்த்துவோம். சூழ்நிலைக்கேற்ப முடிவுகள் எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
வால்மார்ட் நிறுவனம் இந்தியாவில் பார்தி எண்டர் பிரைசஸ் நிறுவனத்துடன் 50:50 என்ற கூட்டு முயற்சியில் கடந்த 6 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இந்த ஒப்பந்தத்தை கடந்த ஆண்டு அக்டோபரில் வால்மார்ட் முறித்துக் கொண்டதோடு தனியாக மொத்த விற்பனையில் ஈடுபடவும் முடிவு செய்தது. இதற்காக பார்தி நிறுவனம் வசமிருந்த 50 சதவீத பங்குகளையும் வால்மார்ட் வாங்கியது.
இந்தியாவில் இப்போது பணம் கொடுத்து வாங்கும் வர்த்தகத்தி்ல் முழுமையாக ஈடுபட வால்மார்ட் திட்டமிட்டுள்ளது என்று குறிப்பிட்ட ஐயர், இந்தியாவில் இத்தகைய தொழிலுக்கு 30,000 கோடி டாலர் அளவுக்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் இது அடுத்த ஆறு ஆண்டுகளில் 70,000 கோடி டாலர் அளவுக்கு அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டார்.
ஏற்கெனவே இத்தகைய தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங் களைக் கையகப் படுத்தும் திட்டம் உள்ளதா என்று கேட்டதற்கு, அதுகுறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
பிரான்ஸின் சங்கிலித் தொடர் நிறுவனமான கேரேஃபோர் நிறுவனத்தின் ஒரு பகுதியை வால்மார்ட் வாங்க உள்ளதாக வெளியான தகவல் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார் ஐயர்.