புதுடெல்லி: இந்திய பொதுத்துறை நிறுவனமான பெட்ரோனெட், தனது இறக்குமதி கட்டமைப்பை விரிவாக்கும் நோக்கில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.40 ஆயிரம் கோடியை முதலீடு செய்ய இருப்பதாக தெரி வித்துள்ளது.
பெட்ரோனெட் நிறுவனமானது திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்கிறது. குஜராத் மாநிலம் தஹேஜ் மற்றும் கேரள மாநிலம் கொச்சியில் இதற்கான கட்டமைப்பை இந்நிறுவனம் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த இறக்குமதி உள்கட்டமைப்பை விரிவுபடுத்தவும், பெட்ரோகெமிக்கல் சார்ந்த வணித்தில் நுழையவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அப்படிவிரிவாக்குவதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி வருவாயும் ரூ.10,000 கோடி நிகர லாபமும் ஈட்ட இந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்து உள்ளது. இதன் பொருட்டு இந்நிறுவனம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.40 ஆயிரம் கோடியை முதலீடு செய்ய உள்ளது.
2021-22 நிதி ஆண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் ரூ.43,169 கோடியாகவும் நிகர லாபம் ரூ.3,352 கோடியாகவும் உள்ளது.
பெட்ரொனெட் நிறுவனம் தஹேஜ் மற்றும் கொச்சியில் உள்ள இறக்குமதி முனையங்களை விரிவாக்குவதோடு மட்டுமல்லாமல், கிழக்கு கடற்கரைப் பகுதியில் மூன்றாவது முனையத்தை அமைக்கும் திட்டத்திலும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு இந்தியாவின் எரிபொருள் பயன்பாட்டில் இயற்கை எரிவாயுவின் பங்களிப்பை அதிகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 2030-ம்ஆண்டுக்குள் இந்தியாவின் எரிபொருள் பயன்பாட்டில் இயற்கை எரிவாயுவின் பங்கை 6.7 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருப்பது குறிப்பிடத்தக்கது.- பிடிஐ