சென்னை: தொழில் நிறுவனங்களில் நீர் மேலாண்மை நடைமுறை குறித்து ஒரு நாள் கருத்தரங்கை இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) தமிழ்நாடு பிரிவு சென்னையில் நடத்தியது.
இதில் டைட்டன், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் உட்பட முன்னணி நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்தில் கடைபிடிக்கப்படும் நீர் மேலாண்மை வழிமுறைகள் குறித்தும், அவற்றின் பலன்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டனர்.
இக்கருத்தரங்கில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் ஆய்வு மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் பொது மேலாளர் சின்னராஜ் பேசுகையில், “தற்போது காலநிலை மாற்றம் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. நிறுவனங்கள் நீர் மேலாண்மையில் தீவிர கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. நீர் மேலாண்மையைப் பொறுத்தவரையில் சுழற்சி பொருளாதார விதிகள் மிகவும் முக்கியம். மறுசுழற்சிதான் சுழற்சி பொருளாதாரத்தின் அடிப்படை. சுழற்சி பொருளாதாரத்துக்கு காடு சிறந்த உதாரணம் ஆகும்.
காட்டில் மரங்களில் காய்க்கும் காய்களை விலங்குகள் உண்ணும். அவற்றின் கழிவுகள் மண்ணோடு கலந்து உரமாகும். மண்ணில் விழும் விதை மீண்டும் மரமாகும். இப்படித்தான் நிறுவனங்களும் செயல்பட வேண்டும். முதலில் நிறுவனங்கள் முடிந்த அளவில் தேவையற்ற நீர் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். பயன்படுத்தப்பட்ட நீரை மறு சுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்த வேண்டும். மறுசுழற்சிக்கான கட்டமைப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இதன் மூலம் நீர் சேமிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், பொருளாதார ரீதியாகவும் பலன் கிடைக்கும்” என்று தெரிவித்தார்.