“இஸ்லாமிய டெலிவரி பிரதிநிதி வேண்டாம்”என ஆன்லைன் மூலம் உணவு டெலிவரி செய்யும் ஸ்விகி நிறுவனத்திடம் பயனர் ஒருவர் வேண்டுகோள் வைத்ததாக ட்வீட் ஒன்று வலம் வருகிறது. இந்த விவகாரத்தில் தங்களது நிலைப்பாட்டை அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம்.
இந்தியாவில் கடந்த 2014 முதல் ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர்களை பெற்று, தங்களது பயனருக்கு டெலிவரி செய்து வருகிறது ஸ்விகி நிறுவனம். இதற்காக இந்தியாவின் பல்வேறு நகரங்களில் உள்ள உணவகங்களுடன் இணைந்துள்ளது ஸ்விகி. அவ்வப்போது இந்நிறுவனத்தின் சில செயல்பாடுகள் கவனம் பெறுவது உண்டு. அந்த வகையில் இப்போது ஒரு விவகாரம் எழுந்துள்ளது.
என்ன நடந்தது? - ஹைதராபாத் நகரை சேர்ந்த ஸ்விகி பயனர் ஒருவர் அந்நிறுவனத்தின் செயலியின் மூலம் தனக்கு வேண்டிய உணவுகளை ஆர்டர் செய்துள்ளதாக தெரிகிறது. அதில் ‘How to Reach?’ பகுதியில் “இஸ்லாமிய டெலிவரி பிரதிநிதி வேண்டாம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஆர்டரை பெற்ற ஸ்விகி டெலிவரி மேன் அதனை கவனித்து, அதை அப்படியே ஸ்கிரீன் ஷாட் எடுத்து, தனது நண்பர்களிடம் பகிர்ந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், அது ட்விட்டர் தளத்தில் பகிரப்பட்டுள்ளது. “இந்த கோரிக்கைக்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை ஸ்விகி எடுக்க வேண்டும். இந்து, இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர் என எல்லோருக்கும் உணவு வழங்க டெலிவரி பிரதிநிதிகளான நாங்கள் இருக்கிறோம்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ட்வீட்டை கவனித்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான மஹுவா மொய்த்ரா அப்படியே அதை ரீட்வீட் செய்துள்ளார். அதோடு அந்தப் பயனரை ஸ்விகி பிளாக் லிஸ்ட் செய்ய வேண்டும், அவரது பெயரை வெளியிட வேண்டும் மற்றும் இது தொடர்பாக போலீசில் புகார் கொடுக்க வேண்டும் என ஸ்விகி நிறுவனத்தை வலியுறுத்தி இருந்தார். அதோடு இது வெறுப்புணர்வை பரப்பும் வகையிலும், மதவெறியை தூண்டும் வகையிலும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
ஸ்விகியின் நிலைப்பாடு என்ன? - “அனைவருக்கும் சம வாய்ப்பை ஏற்படுத்தும் ஸ்விகி தளத்தில் பாகுபாட்டுக்கு இமியளவும் இடமில்லை. ஆர்டர்களை டெலிவரி செய்யும் பிரதிநிதிகளுக்கான அசைன்மென்ட் தானியங்கு முறையில் இயங்குகிறது. மேலும், இது மாதிரியான கோரிக்கைகள் அதில் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படாது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த ஸ்கிரீன் ஷாட் விவகாரம் எங்கள் கவனத்திற்கு வந்தது. அப்போது முதலே இதன் உண்மைத்தன்மையை ஆராயும் பணியை முன்னெடுத்துள்ளோம்” என ஸ்விகி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.