ஹிந்துஜா குழுமத்தின் அங்கமான அசோக் லேலண்ட் நிறுவனம் `மேட் இன் இந்தியா’ திட்டத்தின்கீழ் பேட்டரியில் ஓடும் பஸ்ஸை தயாரித்து அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த பஸ்ஸில் 30 பேர் வரை பயணிக்கலாம். பயணிகளின் எண்ணிக்கையை 65 வரை உயர்த்தவும் வாய்ப்புள்ளது. இந்த பேட்டரி பஸ்ஸை ஒருமுறை சார்ஜ் செய்தால் 120 கி.மீ. வரை ஓடும் என்று அறிமுக விழாவில் பேசிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வினோத் கே தாசரி தெரிவித்துள்ளார்.
இந்த பேட்டரி பஸ் தயாரிப்புக்கு இந்நிறுவனம் ரூ. 22 கோடி முதலீடு செய்ததாகவும் ஒட்டுமொத்தமாக இத்திட்டத்துக்கு ரூ.500 கோடி முதலீடு செய்ய உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். முதலீடுகள் படிப்படியாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த பஸ்ஸின் விலை ரூ. 1.50 கோடி முதல் ரூ. 3.50 கோடி வரையாகும்.
நிறுவனத்தின் 7 ஆலைகளிலும் இந்த பேட்டரி பஸ் தயாரிக்கப்படும் என்று மூத்த துணைத் தலைவர் டி. வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார். தற்போது ஆல்வார், ராஜஸ் தான் மற்றும் விராலிமலை ஆலை களில் தயாரிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், படிப்படியாக பிற ஆலைகளில் இது தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறினார். ஏழு ஆலைகளுமே இத்தகைய பேட்டரி பஸ்ஸை தயாரிக்கும் அளவுக்கு வசதி நிறைந்தவை என்று குறிப்பிட்டார்.
மலைப் பகுதிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் இந்த பஸ்ஸை இயக்க மிகவும் ஏற்றது என்று குறிப்பிட்ட அவர், மூன்று, நான்கு மாநில போக்குவரத்துகளில் இந்த பஸ்ஸுக்கான டெண்டர் கேட்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
இந்த பஸ்ஸின் விலை அதிகமாக இருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, இந்த பஸ்ஸின் விலையில் 60 சதவீதம் லிதியம் அயான் பேட்டரிக்கே சென்று விடுவதாக தாசரி குறிப்பிட்டார்.
தற்போது பேட்டரி மட்டும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாக அவர் கூறினார்.
இந்த பஸ்ஸின் அதிகபட்ச வேகம் மணிக்கு 75 கிலோ மீட்டராகும். இந்த பஸ்ஸில் தீ உணர் கருவி உள்ளது. இதில் மேம்பட்ட டெலிமேடிக்ஸ் வசதி உள்ளது பயணிகள் மற்றும் வாகனம் இருக்கும் இடத்தை எளிதில் அறிந்துகொள்ள முடியும். பஸ்ஸினுள் செல்போன் சார்ஜ் செய்யும் வசதியும், வைஃபை வசதியும் உள்ளது.