வணிகம்

உத்திசார் அடிப்படையில் பொதுத்துறை நிறுவனங்களை விற்க முடிவு: அமைச்சரவை கொள்கையளவில் ஒப்புதல்

பிடிஐ

மத்திய அரசு நிறுவனங்களை உத்திசார் அடிப்படையில் விற்பனை செய்வதற்கு மத்திய அமைச்சரவை கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நிதி ஆயோக் பரிந்துரைத்தபடி 12-க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்யும் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இவ்விதம் கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிறுவனங்களில் லாபம் ஈட்டும் நிறுவனங்களும் அடங்கும். எந்தெந்த நிறுவனங்கள் விற்பனைக்கு வருகிறது என்ற விவரம் அவை ஏலத்திற்கு வரும்போது தெரியவரும் என்று அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அருண் ஜேட்லி தெரிவித்தார்.

பொதுத்துறை நிறுவனங்களை ஆய்வு செய்த நிதி ஆயோக் குழு சில நிறுவனங்களை விற்பனை செய்து விடலாம் என்றும், சில நிறுவனங்களில் அரசின் பங்குகளை 50 சதவீதத்துக்கும் குறைவாகக் குறைத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அரசு நிறுவனத்தை வாங்கும் நிறுவனம் அவற்றை நிர்வகிக்கும் உரிமையைப் பெறும். இந்த முடிவை உத்திசார் முடிவு என நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.

எந்தெந்த நிறுவனங்களை முற்றிலுமாக தனியாருக்கு விற்று விடுவது என்பது பற்றியும், எவற்றில் அரசின் பங்குகளை 50 சதவீதத்துக்கும் குறைவாகக் குறைப்பது என்பது குறித்தும் பங்கு விலக்கல் துறை முடிவெடுக்கும் என அருண் ஜேட்லி தெரிவித்தார்.

இப்போது கொள்கை அளவில் இந்த முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பங்கு விலக்கல் துறை ஆய்வு செய்த பிறகு எந்தெந்த நிறுவனங்களை எப்படி விற்பனை செய்வது என்பது குறித்து தனித்தனியாக ஆராயப்படும் என்று ஜேட்லி கூறினார். மூட வேண்டிய அரசு நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

நிறுவனங்களை மதிப்பீடு செய்வது குறித்த ஆய்வுகள் நடைபெறுகின்றன. இதில் வெளிப்படைத் தன்மையான மதிப்பீடு முறை பின்பற்றப்படும் என்று ஜேட்லி கூறினார். நிறுவனங்களின் சொத்துகளை மதிப்பீடு செய்யும்போது அவற்றின் அசையா சொத்து உள்ளிட்ட பிற சொத்து விவரங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்

உத்திசார் அடிப்படையிலான அரசு நிறுவன விற்பனை மூலம் ரூ.20,500 கோடி திரட்ட வேண்டும் என்ற நடப்பு நிதி ஆண்டின் இலக்கை எட்ட முடியுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, தற்போது நிதி ஆண்டின் 6 மாதங்கள் முடிவடைந்து விட்டன. இந்த நிதி ஆண்டில் ஏற்கெனவே குறிப்பிடத்தக்க இலக்கை எட்டிவிட்டோம்.

இந்த ஆண்டில் அரசு நிறுவன பங்குகளை விற்பனை செய்தது மற்றும் ஆஃபர் பார் சேல் என்ற அடிப்படையில் ரூ.8 ஆயிரம் கோடி திரட்டப்பட்டது. பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பதன் மூலம் நடப்பு நிதி ஆண்டில் ரூ.36 ஆயிரம் கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஜேட்லி கூறினார்.

இந்த ஆண்டுக்குள் விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக குறைந்த விலைக்கு விற்பனை செய்வதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்று ஜேட்லி திட்டவட்டமாகக் கூறினார்.

லாபம் ஈட்டும் பாரத் எர்த் மூவர்ஸ், சிஇஐ உள்ளிட்ட நிறுவனங் களோடு நஷ்டத்தில் இயங்கும் ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனத்தை விற்பது தொடர்பான பட்டியலை நிதி ஆயோக் தயாரித்துள்ளது.

இதற்கு முன்பு 2003-04-ம் ஆண்டில் ஜெஸோப் அண்ட் கோ நிறுவனத்தின் பங்குகள் உத்தி சார் அடிப்படையில் விற்கப்பட்டன. இந்நிறுவனத்தின் 72 சதவீத பங்குகள் இந்தோ வேகோன் இன்ஜினீயரிங் நிறுவனத்துக்கு ரூ.18.18 கோடிக்கு விற்கப்பட்டது.

1999-2000-வது ஆண்டில் மாடர்ன் ஃபுட்ஸ் நிறுவனம் ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்துக்கு ரூ.105.45 கோடிக்கு விற்கப்பட்டது.

1999-2000 மற்றும் 2003-2004 ஆகிய ஆண்டுகளில் 16 பொதுத் துறை நிறுவன பங்குகள் விலக்கப் பட்டு ரூ.6,344 கோடி திரட்டப்பட்டது. ஐபிபி நிறுவனத்தை ஐஓசி நிறுவனத்துக்கு விற்றதன் மூலம் ரூ.1,153 கோடி திரட்டப்பட்டது.

இந்தியன் பார்மசூடிக்கல்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திடம் ரூ.1,490 கோடிக்கு விற்கப்பட்டது. விஎஸ்என்எல் நிறுவனம் டாடா குழுமத்திடம் ரூ.1,439 கோடிக்கு விற்கப்பட்டது. ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனம் வேதாந்தா குழும நிறுவனத்திடம் ரூ.768 கோடிக்கு விற்கப்பட்டது.

SCROLL FOR NEXT