வணிகம்

நானோ கார் அல்லாத பிற கார்களுக்கு வரிச் சலுகை கிடையாது: குஜராத் மாநில அரசு திட்ட வட்டம்

செய்திப்பிரிவு

குஜராத் மாநிலம் சனந்த் ஆலையில் தயாரிக்கப்படும் கார்களில் நானோ கார் தவிர பிற கார்களுக்கு வரிச் சலுகை தரப்படமாட்டாது என குஜராத் மாநில அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் சிங்குர் பகுதியில் நானோ கார் ஆலை தொடங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அங்கு பெரும் போராட்டம் வெடித்ததைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் சனந்த் பகுதியில் ஆலை அமைக்க அப்போது அனுமதி அளிக்கப்பட்டது.

ஆனால் வரிச் சலுகையானது நானோ காருக்கு மட்டுமே பொருந்தும் என்று குஜராத் மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த ஆலையில் வேறு கார்கள் தயாரிக்கப்பட்டால் அதற்கு வரிச் சலுகை கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலையில் தயாராகும் பிற மாடல் கார்களுக்கும் வரிச் சலுகை அளிக்க வேண்டும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மாநில அரசை கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக 2013 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் அப்போது டாடா குழுமத் தலைவராக இருந்த சைரஸ் மிஸ்திரி தொடர்ந்து குஜராத் மாநில அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். அப்போது இந்த ஆலையில் தயாரிக்கப்படும் நிறுவனத்தின் பிற மாடல் கார்களுக்கும் வரிச் சலுகை அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ஒருவேளை அவர்களுக்கு வரிச் சலுகை தேவையெனில் அதற்கென தனியாக வேறொரு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். பிற மாடல் கார்களுக்கும் இதுபோன்ற சலுகைகளை அளிக்க அரசு தயாராக உள்ளது. சுஸுகி நிறுவனத்துக்கும் ஃபோர்டு நிறுவனத்துக்கும் அளிக்கப்படுவதைப் போன்று சலுகை வழங்கப்படும் என மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் நானோ காருக்கு வழங்கப்படும் அளவுக்கு அதிக அளவில் சலுகை வழங்க முடியாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

2008-ம் ஆண்டு மேற்கு வங்கத்திலிருந்து வெளியேறும் முடிவை ரத்தன் டாடா எடுத்தார். அப்போது குஜராத் மாநில முதல்வராயிருந்த நரேந்திர மோடி, வேறு எந்த நிறுவனத்துக்கும் வழங்கப்படாத அளவுக்கு அதிகமான வரிச் சலுகையை நானோ கார் திட்டத்துக்கு அளித்தார். இதைத் தவிர பிற சலுகைகளும் வழங்கப்பட்டன.

ரூ. 9,670 கோடி தொகை மதிப்பு கூட்டு வரி என்ற அளவில் சலுகையாக குஜராத் மாநில அரசால் அளிக்கப்பட்டது. 0.1 சதவீத வரி 25 ஆண்டுகளுக்குப் பிறகு செலுத்த வேண்டும் என கூறப்பட்டது. இதன்படி 25 ஆண்டுகளுக்குப் பிறகுதான் நானோ காருக்கு மதிப்பு கூட்டு வரியை டாடா நிறுவனம் செலுத்த வேண்டியிருக்கும்.

இது தவிர நிலத்துக்கான பத்திர பதிவு, முத்திரைத்தாள் கட்டணம், மின் வரி மற்றும் பிற உள்ளூர் வரிகளிலும் சலுகை அளிக்கப்பட்டது. இது தவிர ரூ. 200 கோடி மதிப்பிலான கட்டமைப்பு வசதிகள் அதாவது அணுகு சாலை, பவர் ஸ்டேஷன், கழிவுநீர் குழாய்ப்பாதை, கழிவுநீர் சுத்திகரிப்பு வசதி, எரிவாயு இணைப்பு, குடிநீர் இணைப்பு உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டன.

அகமதாபாத்திலிருந்து 40 கி.மீ. தொலைவில 1,100 ஏக்கர் பரப்பளவில் இந்த ஆலை அமைந்துள்ளது. ஆண்டுக்கு 2.5 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இது உருவாக்கப்பட்டது. ஆனால் 2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் இந்த ஆலையில் 32,521 நானோ கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT