உலகில் மக்கள் தொகை அதிகம் நிறைந்த நாடுகளில் ஒன்று இந்தியா. இங்கு ஏழைகளின் ஏரோபிளேன் என அறியப்படுகிறது ரயில் போக்குவரத்து. இந்நிலையில், கன்ஃபார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்தால் ரத்து செய்ததற்கான கட்டணத்துடன் 5 சதவீதம் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இதற்கு சில கண்டிஷன்கள் அப்ளை செய்யப்பட்டுள்ளது. அது என்ன?
கன்ஃபார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்யும் கட்டணத்தில் 5 சதவீத ஜிஎஸ்டியை அமல்படுத்துவதற்கான வழிகாட்டுதலை கடந்த 3-ம் தேதியன்று மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டது. இது தொடர்பாக ரயில்வேயின் வரி ஆராய்ச்சி பிரிவு (TRU) சுற்றறிக்கை மூலம் விளக்கம் கொடுத்துள்ளது.
ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது என்பது ஒரு ஒப்பந்தமாகும். இதன் மூலம் சேவை வழங்குநரான இந்திய ரயில்வே, வாடிக்கையாளருக்கு சேவைகளை வழங்குவதாக உறுதியளிக்கிறது. இதுவரையில் ரத்து செய்யப்படும் ரயில் டிக்கெட்டுகளுக்கு அதற்கான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்தது. இனி அதோடு சேர்த்து ஜிஎஸ்டி வரியும் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஜிஎஸ்டி பிடித்தம் முதல் வகுப்பு மற்றும் ஏசி பெட்டிகளுக்கான டிக்கெட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரி பிடித்தம் செய்யப்படும் முறையை சிறிய உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்வோம். ஏசி அல்லது முதல் வகுப்பு ரயில் டிக்கெட் ரத்து செய்தால் ரூ.240 ரத்து செய்ததற்கான கட்டணமாக பிடித்தம் செய்யப்படும். அதற்கான 5% ஜிஎஸ்டி ரூ.12. அதை சேர்த்தால் மொத்தமாக ரூ.252 பிடித்தம் செய்யப்படும். இருந்தாலும் இந்த ஜிஎஸ்டி பிடித்தம் செய்யும் நடைமுறை செகண்ட் ஸ்லீப்பர் மற்றும் இருக்கை வசதி கொண்டு டிக்கெட்டுகளுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.