ஆண்டுதோறும் ஆகஸ்ட் 30-ம் தேதி தேசிய சிறுதொழில் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிறு தொழில் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில் இந்த நாள் உள்ளது. சிறு தொழிலில் ஈடுபட்டு வரும் நபர்களுக்கு உறுதுணைபுரியும் வகையிலும் இந்த நாள் அமைந்துள்ளது.
இந்தியாவில் சுமார் 6.3 கோடிக்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளதாகவும். ஒட்டுமொத்த ஏற்றுமதியில் சுமார் 45 சதவீதம் இந்த நிறுவனங்களின் பங்கு இருப்பதாகவும் சில புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிதி சார்ந்த ஆதாரங்களில் சிறுதொழில் மிகவும் முக்கியமானவை. உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த நிறுவனங்களாக இந்த துறை இயங்கி வருகிறது. அதற்காகவே இந்த வகை தொழில்களுக்கு என பயிற்சி, மானியம், தொழில் தொடங்க கடன் என பலவிதமான உதவிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. அவ்வப்போது இது குறித்த அறிவிப்புகள் உள்ளூர் செய்தித்தாள்களில் வெளியாகும். அதன் மூலம் தொழில் தொடங்கும் ஆர்வத்தில் உள்ளவர்கள் பலன் பெறலாம்.
இந்த நாளின் சிறப்பு என்ன? - கடந்த 2000-மாவது ஆண்டு ஆகஸ்ட் வாக்கில் இந்திய சிறுதொழில் அமைச்சகம் இந்தியாவில் உள்ள சிறு நிறுவனங்களுக்கு சிறப்பு ஆதரவை வழங்கும் வகையில் சிறிய அளவிலான தொழில்கள் (SSI) துறைக்கான கொள்கை சார்ந்த தொகுப்பை அறிமுகப்படுத்தியது.
> புதிய நிறுவனங்களை நிறுவவும், நாட்டின் நிதி நிலையை உயர்த்தவும் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
> ஆகஸ்ட் 30, 2001 அன்று புது டெல்லியில் SSI மாநாட்டை நடத்தியுள்ளது. அதில் சிறந்து விளங்கிய தொழில் நிறுவனங்களுக்கு தேசிய விருதுகளும் வழங்கப்பட்டுள்ளது. அன்று முதல் மத்திய அரசு இதனை ஒரு வழக்கமாக கடைபிடிக்க தொடங்கியுள்ளது.
> ஊரக மற்றும் நகரப் பகுதிகளை சேர்ந்த தனிநபர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் இந்த நாளின் முக்கியத்துவம் அமைந்துள்ளது.
‘சிறுதொழில் தினம்’ சில Facts - > இயந்திரங்களில் ரூ.25 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை நிறுவனங்கள் முதலீடு செய்திருந்தால் அது சிறுதொழில் என வரையறுக்கப்பட்டுள்ளது.
> இந்தியாவில் சிறு தொழில்களின் மூலம் சுமார் 7500-க்கும் மேற்பட்ட பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
> நாட்டில் 40 சதவீத பொருட்களை உற்பத்தி செய்வது மற்றும் சேவை வழங்குவது இந்த துறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள மக்கள் வேலைவாய்ப்பும் பெற்றுள்ளார்களாம்.
> இந்தியாவின் ஏற்றுமதி சிறுதொழில் நிறுவனங்களை சார்ந்தே உள்ளது.
> கடந்த ஜூன் 2020 வாக்கில் சிறுதொழில் நிறுவனங்களுக்கான புதிய வரைமுறையை வகுத்தது இந்திய அரசு.
> நாட்டில் சிறுதொழில் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்திற்காக சுயசார்பு இந்தியா நிதியை அறிமுகம் செய்துள்ளது அரசு.
> MSME மேம்பாட்டுக்கான இன்னும் பிற முயற்சிகளாக Udyam பதிவு, தேசிய எஸ்.சி-எஸ்.டி ஹப் (NSSH), சாம்பியன்ஸ் போர்டல் மற்றும் நிறுவன மேம்பாட்டு மையங்களை நிறுவுதல் போன்றவையும் அடங்கும்.
இன்று - ஆகஸ்ட் 30: தேசிய சிறுதொழில் தினம்