வணிகம்

பங்குச் சந்தையில் பிஎப் நிதி ரூ.9,148 கோடி முதலீடு

பிடிஐ

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் நிதி ரூ.9,148 கோடியை பங்குச் சந்தை திட்டங்களில் (இடிஎப்) முதலீடு செய்துள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார். மேலும் கடந்த மாதம் செப்டம்பர் 30-ம் தேதி வரை முதலீடு செய்த தொகைக்கு 9.43 சதவீதம் லாபம் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

1952-ம் கொண்டு வந்த தொழிலாளர் வைப்பு நிதி மற்றும் இதர விதிகள் சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வருவது பற்றி தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் மறு பரிசீலனை செய்துவருகிறது. 20-க்கும் குறைவாக பணியாளர்கள் உள்ள நிறுவனங்களை இபிஎப் திட்டங்களில் கொண்டு வருவதை மறுபரிசீலனை செய்ய இருப்பதாக பண்டாரு தத்தாத்ரேயா கூறினார்.

தற்போது 20 தொழிலாளருக்கு மேல் பணியாற்றும் சிறு தொழில் நிறுவனங்களில் அவர்களுக்கு பிஎப் பிடித்தம் செய்ய வேண்டியது கட்டாயம் என்று சட்டத்தை மாற்றி, இந்த வரம்பு 10 ஊழியர்கள் என குறைக்கப்பட திருத்தம் கொண்டு வர தொழிலாளர் நல அமைச்சகம் முடிவு செய்தது. இதற்கு ஏற்ப நடைமுறையில் உள்ள பிஎப் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவும் திட்டமிட்டிருந்தது. ஆனால் தொழிலாளர் நல அமைச்சகத்தின் இந்த முன்வரைவுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

``இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வரை நாங்கள் ரூ.9,148 கோடியை இடிஎப் திட்டங்களில் முதலீடு செய்துள்ளோம். தற்போதைய பங்குச்சந்தை நிலவரப்படி ரூ.10,003 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 9.34 சதவீதம் லாபம் கிடைத்துள்ளது. இந்த நிதியாண்டில் ரூ.13,000 கோடி வரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம். இதுதான் இந்த ஆண்டுக்குரிய 10 சதவீத தொகை என்று தத்தாத்ரேயா தெரிவித்தார்.

SCROLL FOR NEXT