ஹெச்டிஎப்சி வங்கி நிகர லாபம் 20% உயர்வு
தனியார் வங்கியான ஹெச்டிஎப்சி வங்கியின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 20 சதவீதம் உயர்ந்து ரூ.3,455 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் லாபம் ரூ.2,869 கோடியாக இருந்தது. மொத்த வருமானம் ரூ.17,324 கோடியில் இருந்து ரூ.19,970 கோடியாக உயர்ந்திருக்கிறது.
மொத்த வாராக்கடன் 1.02 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 0.9 சதவீதமாக இருந்தது. நிகர வாராக்கடனும் 0.2 சதவீதத்தில் இருந்து 0.3 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
வாராக்கடன் மற்றும் இதர செலவுகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.640 கோடியில் இருந்து ரூ.749 கோடியாக அதிகரித்திருக்கிறது. நடப்பு நிதி ஆண்டின் அரையாண்டில் நிகர லாபம் 20.3 சதவீதம் உயர்ந்து ரூ.6,694 கோடியாக இருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் இதே காலத்தில் ரூ.5,565 கோடியாக இருந்தது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 1.05 சதவீதம் சரிந்து 1,250 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.
கோடக் மஹிந்திரா நிகர லாபம் 28% உயர்வு
தனியார் வங்கியான கோடக் மஹிந்திரா வங்கியின் நிகர லாபம் 28 சதவீதம் உயர்ந்து ரூ.1,202 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.942 கோடியாக இருந்தது. வங்கியின் மொத்த வருமானம் 8,415 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.6,729 கோடியாக இருந்தது.
இதர வருமானம் 66 சதவீதம் உயர்ந்து 2,881 கோடியாக இருக்கிறது.
வங்கியின் மொத்த வாராக்கடன் 2.49 சதவீதமாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 2.35 சதவீதமாக இருந்தது. நிகர வாராக்கடன் 1.20 சதவீதமாக இருக்கிறது. நிகர வட்டி வரம்பு 4.30 சதவீதத்தில் இருந்து 4.47 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. `காசா விகிதம்’ 39 சதவீதமாக இருக்கிறது.
வாராக்கடனுக்காக ஒதுக்கப்பட்ட தொகை சிறிதளவு உயர்ந்து ரூ.217 கோடியாக இருக்கிறது. டெபாசிட் வளர்ச்சி 15.41 சதவீதமாகவும், கடன் வளர்ச்சி 14.41 சதவீதமாகவும் இருக்கிறது.