என்டிடிவி செய்தி நிறுவனத்தின் 29.18% பங்குகளை அதானி குழுமம் கையகப்படுத்திள்ளது. நேற்று மாலை முதல் ஊடக உலகின் பரபரப்புச் செய்தியாக இது மாறியுள்ளது.
29.18% என்பது மூன்றில் ஒரு பங்கு. இதனால் என்டிடிவி நிர்வாக முடிவுகளைக் எடுக்கக் கூடிய பங்குதாரராகவும் அதானி குழுமம் செயல்படும் அந்தஸ்தைப் பெற்றுள்ளது. ஊடக நிறுவனம் ஒன்று கார்ப்பரேட் கைகளுக்கு மாறுவது வாத விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
எப்படி நிகழ்ந்தது? பிரனாய் ராய், ராதிகா ஆகியோரின் ஆர்ஆர்பிஆர் ஹோல்டிங் நிறுவனம் என்டிடிவி நிறுவனத்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனத்தின் 29.18 சதவீதம் பங்குகளை மறைமுகமாக உரிமை கொண்டாடும் வகையில் அதானி மீடியா குழுமம் (AMNL Adani Enterprises ) அறிவித்துள்ளது.
தற்போது மேலும் 26% பங்குகளை கைப்பற்ற வெளிப்படையாக கோரியுள்ளது. ஜெஎம் ஃபினான்சியல் என்ற நிறுவனம் இந்த வெளிப்படையான வர்த்தகத்தை பேசி முடிக்க நியமிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் கைகூடினால் அதானி குழுமத்திடம் என்டிடிவியின் பெரும்பாலான பங்குகள் வந்து சேரும். அதாவது 55.18% பங்குகளை வைத்திருக்கும் நிலை வரும். என்டிடிவியின் 38.55% பொது பங்குகளாக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால், ஒரு நிறுவனத்தின் பங்குகளை பங்குதாரர்களின் விருப்பமின்றி வாங்கும் செயல் 'முறையற்ற கையகப்படுத்துதல்' (Hostile Takeover) என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
;
என்ன சொல்கிறது என்டிடிவி? இது குறித்து என்டிடிவி தனது இணையத்தில் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், என்டிடிவி எப்பொழுதுமே அதன் செயல்பாட்டில், அதன் இதழியலில் சமரசம் செய்ததில்லை. நாங்கள் எங்கள் பாணி இதழியலை பெருமிதத்துடன் தொடர்கிறோம். இந்த மொத்த பரிவர்த்தனையும் எவ்வித ஆலோசனையும் இல்லாமல் தகவலும் தெரிவிக்கப்படாமல் ஒப்புதல் பெறப்படாமலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
2009- 2010 ல் என்டிடிவி நிறுவனர்களான ராதிகா, பிரனாய் ராய் ஆகியோருடன் செய்துகொண்ட கடன் ஒப்பந்தத்தின் அடிப்படையில் விசிபிஎல் இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. என்டிடிவியின் 29.18 சதவீத பங்குகளை வைத்திருக்கும் ஆர்ஆர்பிஆர்ஹெச் நிறுவனத்திடம் அதன் வசம் உள்ள எல்லா பங்குகளையும் இரண்டு நாட்களுக்குள் விசிபிஎல் நிறுவனத்திடம் மாற்றும்படி கூறப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்டிடிவி நிறுவனம் ஆண்டுக்கு ரூ.230.91 கோடி வருமானம் மற்றும் ரூ.59.19 கோடி நிகர லாபம் பெற்று இயங்கி வருகிறது.