வணிகம்

வட்டி விகித உயர்வு எதிர்பார்ப்பு எதிரொலி - சென்செக்ஸ், நிஃப்டி 1.5% வீழ்ச்சி

செய்திப்பிரிவு

மும்பை: சர்வதேச அளவில் பெரும்பாலான நாடுகளின் மத்திய வங்கிகள் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், வட்டி விகிதங்களை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்களிடையே மேலோங்கியது. இதையடுத்து, பங்குச் சந்தையில் மந்தநிலை நேற்றைய வர்த்தகத்திலும் தொடர்ந்தது.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் 872.28 புள்ளிகளை (1.46%) இழந்து 58,773.87-ல் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 267.75 புள்ளிகள் (1.51%) சரிந்து 17,495.70-ல் நிலைத்தது.

நிஃப்டி உலோகத் துறை குறியீட்டெண் ஜூன் 22-க்குப் பிறகு மிகவும் மோசமான வகையில் 3.2 சதவீத இழப்பை சந்தித்தது. குறிப்பாக, டாடா ஸ்டீல் பங்கின் விலை 4.5 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.

இதைத் தவிர, நிஃப்டி வங்கி துறை குறியீட்டெண் 1.8 சதவீதம் குறைந்தது. பஞ்சாப் நேஷனல் வங்கி பங்கின் விலை 2.8 சதவீதமும், கோட்டக் மஹிந்திரா வங்கி 2.4 சதவீதமும் சரிந்தன.

நிஃப்டி 50 நிறுவனங்களின் பட்டியலில் வெறும் ஐந்து நிறுவனப் பங்குகள் மட்டுமே வர்த்தகத்தை ஏற்றத்துடன் நிறைவு செய்தன.

சென்செக்ஸ் 30 நிறுவனங்களின் பட்டியலில், ஐடிசி, நெஸ்லே இந்தியா ஆகிய இரண்டு நிறுவனங்கள் தவிர்த்து, ஏஷியன் பெயிண்ட்ஸ், எல் அண்ட் டி, விப்ரோ, பஜாஜ் ஃபைனான்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, விப்ரோ உள்ளிட்ட 28 நிறுவனப் பங்குகளும் குறைந்த விலைக்கே கைமாறின. இந்தியா மட்டுமின்றி உலக அளவிலும் பங்கு வர்த்தகம் மந்தமாகவே காணப்பட்டன.

பங்குச் சந்தைகள் அதிகபட்ச வீழ்ச்சியை சந்தித்தபோதும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு நேற்றைய வர்த்தகத்தில் ஏற்பட்ட இழப்பிலிருந்து மீண்டு 79.84-ல் நிலைத்தது.

SCROLL FOR NEXT