தற்போதைய நிலைமையில் வங்கிகளின் வாராக்கடன் பிரச்சினை யில்லை. அது குறித்து கவலை யடையவும் தேவையில்லை. வட்டி குறைப்பு செய்யப்பட்டிருப்பதால் வங்கிகள் சுமூகமான நிலைமையில் இருக்கும். மேலும் வட்டி குறைப்பு செய்திருப்பதால் கருவூல லாபம்(பத்திரங்களை விற்பதன் மூலம் கிடைக்கும் தொகை) ஒரு லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என எட்டாவது பிரிக்ஸ் மாநாட்டில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது புதிய மேம்பாட்டு வங்கித் தலைவர் கே.வி.காமத் கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது: ஏற்கெனவே வட்டி குறைப்பு செய்திருப்பதைவிட மேலும் ஒரு சதவீதம் வட்டி குறைப்பு செய்வதற்கான சூழல் இருக்கிறது. வட்டி குறைக்கப்படும் பட்சத்தில் கரூவூல லாபம் ரூ.1.5 லட்சம் கோடியாக இருக்கும். மொத்தமாக வட்டி குறைப்பின் மூலம் ரூ.2.5 லட் சம் கோடி லாபம் கிடைக்கும். கடந்த சில காலாண்டுகளாக வாராக்கடன் அதிகரிப்பால் வங்கிகள் நஷ்டம் அடைந்தன. அதனால் மூலதனம் ஒரு பிரச்சினையாக இருக்கும் என கருதப்பட்டது. வட்டி குறைப் பினால் வங்கிகளுக்கு மூலதனம் பிரச்சினையாக இருக்கவில்லை.
வங்கிகளின் வாராக்கடன் அதிகமாக இருந்தாலும், எந்த கடன்களில் பிரச்சினைகள் இருக்கிறது என்பதை வங்கிகள் கண்டறிந்து அதனை மீட்கும் நடவடிக்கையில் இறங்கிவிட்டனர். தவிர மூலதனமும் இருப்பதால் வங்கிகளுக்கு பெரிய பிரச்சினை இருக்காது என்றார்.
பிரிக்ஸ் நாடுகள் இணைந்து உருவாக்கி இருக்கும் புதிய மேம்பாட்டு வங்கி பற்றி கூறும்போது, அடுத்த ஆண்டில் 250 கோடி டாலர் கடன் கொடுக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. கடந்த 2014-ம் ஆண்டு 10,000 கோடி டாலர் முதலீட்டில் இந்த வங்கி தொடங்கப்பட்டது.
கடந்த சில வருடங்களாக சர்வதேச அளவில் புதிதாக உருவான பொருளாதார வளத்தில் இந்த நாடுகளின் பங்களிப்பு 50 சதவீதத்துக்கு மேல் இருக்கிறது. இந்த விகிதத்தில் எந்த மாற்றமும் இருக்கும் என்று நினைக்கவில்லை.
ஷாங்காயை தலைமையாக கொண்டு செயல்படும் இந்த வங்கியின் பணியாளர்கள் எண்ணிக்கையை அடுத்த மூன்று ஆண்டுகளில் 300 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். இதுவரை 90 கோடி டாலர்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.
கட்டுமான திட்டங்களுக்கு சர்வதேச அளவில் 1.5 லட்சம் கோடி டாலர் ஆண்டுக்கு தேவைப்படு கிறது. அனைத்து புதிய மேம்பாட்டு வங்கி போல கூட்டு வங்கிகள் இது 15 சதவீத தொகையை வழங்கலாம். இந்த பிரிவில் வங்கிகள் போட்டியிடுவதை விட கூட்டாக இணைந்து செயல்படலாம் என்று கே.வி.காமத் கூறினார்.
கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை ஐசிஐசிஐ வங்கியின் தலைவராக இருந்தார்.