புதுடெல்லி: ‘என்னுடைய உடல்நலனில் நான் மோசமாக முதலீடு செய்தேன், நீங்கள் அதிகம் முதலீடு செய்யுங்கள்’ என்ற ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் அறிவுரையை தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா, தனது ட்விட்டர் பக்கத்தில் சுவாரஸ்யமான, பாடம் புகட்டக்கூடிய, விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய தகவலை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். இதனால் இவரை 95 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர். அந்த வகையில், தொழிலதிபரும் சமீபத்தில் உடல்நலக்குறைவால் காலமானவருமான ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் அறிவுரையை ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று பகிர்ந்துள்ளார்.
அதில், “இந்த பதிவு அதிக அளவில் பகிரப்பட்டுள்ளது. ராகேஷ் ஜுன்ஜுன்வாலா தனது வாழ்வின் இறுதி காலத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் மிகவும் மதிப்புமிக்க, லாபகரமான முதலீட்டு அறிவுரையை வழங்கி உள்ளார். அந்த அறிவுரை பல நூறு கோடி மதிப்பு கொண்டது. அதன் சிறந்த பகுதி என்னவென்றால், ‘உங்கள் நேரத்தை முதலீடு செய்யுங்கள் பணத்தை அல்ல’ என்பது ஆகும்” என கூறப்பட்டுள்ளது. இறுதியில், ‘சண்டே ஹேஷ்டேக்’ என குறிப்பிட்டுள்ளார்.
இதனுடன், 2019-ம் ஆண்டு ஒரு நேர்காணலின் போது ராகேஷ் ஜுன்ஜுன்வாலா தெரிவித்த கருத்துகளின் ஒரு பகுதி அடங்கிய ஸ்க்ரீன்ஷாட்டை ஆனந்த் மஹிந்திரா பதிவேற்றம் செய்துள்ளார். அதில், “என்னுடைய உடல்நலனில் நான் மோசமாக முதலீடு செய்தேன். இதில் அதிகம் முதலீடு செய்யுங்கள் என உங்கள் அனைவரையும் வலியுறுத்துகிறேன். ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து இருந்தாலும் எனது உடல்நலனில் எனக்கு மகிழ்ச்சி இல்லை” என ராகேஷ் குறிப்பிட்டுள்ளார்.
ஆனந்த் மஹிந்திராவின் இந்த ட்விட்டர் பதிவை ஒரு சில மணி நேரத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.