வணிகம்

“லாபம் ரூ.350 கோடி எனில், ரூ.1000 கோடிக்கு இலவசங்கள் எப்படி சாத்தியம்?” - 'டோலோ-650' மாத்திரை நிறுவனம் விளக்கம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டோலோ-650 மாத்திரைகளை விளம்பரப்படுத்த மருத்துவர்களுக்கு ரூ.1,000 கோடி மதிப்பிலான சலுகைகளை இலவசமாக வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை மற்றும் தவறானவை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

டோலோ-650 மாத்திரைகளை தயாரிக்கும் பெங்களூருவை தளமாகக் கொண்ட மைக்ரோ லேப்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் தலைவர் ஜெயராஜ் கோவிந்தராஜு என்பவர் இதுதொடர்பாக பேசுகையில், "கரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது டோலோ மாத்திரைகள் மூலம் ரூ.350 கோடி வணிகம் மட்டுமே நடந்துள்ள போது, ரூ.1000 கோடி அளவுக்கு செலவழித்து மருந்தை விளம்பரப்படுத்துவது என்பது சாத்தியமில்லை. ரூ.350 கோடி லாபம் ஈட்டிய பிராண்டின் மார்க்கெட்டிங்கிற்கு எந்த நிறுவனமும் 1000 கோடி அளவுக்கு செலவழிக்க முடியாது. எனவே எங்கள்மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை மற்றும் தவறானவை" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, டோலோ-650 மாத்திரைகளை நோயாளிகளுக்கு பரிந்துரை செய்ய மருத்துவர்களுக்கு ரூ.1,000 கோடி மதிப்பிலான சலுகைகளை இலவசமாக வழங்கியதாக இந்திய மருத்துவ மற்றும் விற்பனை பிரதிநிதிகள் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில் தெரிவித்துள்ளது. இந்த பொது நல வழக்கு நீதிபதி ஏ.எஸ். போபண்ணாவை உள்ளடக்கிய நீதிபதி டி.ஒய். சந்திசூட் தலைமையிலான அமர்வு முன்பு நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்தது.

அப்போது, விற்பனை பிரதிநிதிகள் அமைப்பின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் பரீக் இதுகுறித்து வாதிட்டதாவது:

‘‘காய்சலை கட்டுப்படுத்துவதற்கு தேவையான பாராசிட்டமல் மருந்துகளை தயாரித்து வரும் டோலோ, கரோனா காலத்தில் மிகவும் பிரபல நிறுவனமாக அறியப்பட்டது. டோலோ-650 மாத்திரைகளை பரிந்துரை செய்வதற்காக மட்டும் அந்த நிறுவனம் மருத்துவர்களுக்கு ரூ.1,000 கோடி மதிப்பிலான இலவச சலுகைகளை வழங்கியுள்ளது. எனவே, இந்தியாவில் விற்கப்படும் மருந்துகளின் கலவைகள் மற்றும் விலையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறினார். மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (சிபிடிடி) தரவுகளை மேற்கொள்காட்டி அவர் இந்த வாதத்தை முன்வைத்தார்.

அப்போது இந்த வழக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தீவிரமான பிரச்சினை என தெரிவித்த நீதிபதிகள் அமர்வு, மத்திய அரசு இதுகுறித்து ஒருவாரத்தில் விரிவாக பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு 10 நாட்களுகுப் பிறகு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT