வணிகம்

ஜனவரி முதல் ரூ.2,500-க்கு விமான பயணம்: திட்ட அறிமுக விழாவில் அமைச்சர் தகவல்

பிடிஐ

பிராந்தியங்களுக்கிடையிலான விமான போக்குவரத்து திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரும். ஒரு மணி நேர விமான பயணத்துக்கு ரூ. 2,500 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதலாவது பிராந்திய விமான போக்குவரத்து சேவை ஜனவரி மாதம் தொடங்கும் என்று மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தை அமல்படுத்து வதில் அரசு மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். டெல்லியில் பிராந் திய விமான இணைப்பு சேவைத் திட்டத்தை அதிகாரபூர்வமாக நேற்று அறிவித்த அவர் இதற்கு உடான் என பெயரிடப்பட்டுள்ள தாகக் கூறினார். அதாவது சாதாரண மக்களுக்கும் விமான பயணம் சாத்தியமாகும் என்பதை ஹிந்தியில் உணர்த்தும் விதமாக உடான் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின்கீழ் விமான சேவைகளை இயக்கும் நிறுவனங்கள் அது தொடர்பான விண்ணப்பத்தை அளிக்க வேண்டும். அதாவது வழக்கமாக விமான சேவை உள்ள விமான நிலையங்கள் அல்லாது பிற பகுதிகளுக்கு இயக்கும் வகையில் இந்த விமான மார்க்கம் இருக்க வேண்டும். இத்தகைய விண்ணப்பங்களை மூன்று நாள்களுக்குள் அரசு பரிசீலிக்கும். இந்தத் திட்டம் முழுவதும் 10 வார காலத்துக்குள் முழுமை பெறும்.

இந்தத் திட்டத்துக்கு கடந்த ஜூன் மாதம் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதன்படி ஒரு மணி நேரத்துக்குள்ளான விமான பயணத்துக்குக் கட்டணமாக ரூ.2,500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் இயக்கப்படும் விமானங்களுக்கு முக்கிய விமான நிலையங்களில் குறைந்தபட்ச வரி விதிக்கப்படும். இந்த வரி விதிப்பு குறித்த அறிவிப்பு இம்மாதம் 31-ம் தேதி வெளியிடப்படும் என்று மத்திய விமான போக்குவரத்துத்துறைச் செயலர் ஆர்.என். சௌபே தெரிவித்துள்ளார்.

ஹவாய் செருப்பு அணிந்த சாதாரண மனிதனும் விமானத்தில் பயணிக்கலாம் என்று திட்ட அறிமுக விழாவில் பேசிய மத்திய விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா குறிப்பிட்டார்.

ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் குறைவாக பயன்படுத்தப்படும் விமான நிலையங்கள் அல்லது பயன்படுத்தப்படாத விமான நிலையங்கள் ஆகியவற்றில் இந்த விமான சேவை இயக்கப்படும். இந்தத் திட்டத்துக்கு அடுத்த நான்கு ஆண்டுகளில் ரூ. 4 ஆயிரம் கோடியை செலவிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் புழக்கத்தில் இல்லாத 50 விமான நிலையங்களை மீண்டும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் பிகானீர், ஜெய்சால்மர், குஜராத்தில் பவநகர், ஜாம்நகர், பஞ்சாபில் பதின்டா, பதான்கோட், உத்தரப் பிரதேசத்தில் அலகாபாத், அஸாமில் லக்கிம்பூர், ஜோர்ஹட் ஆகிய பகுதிகளிடையே விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரூ. 2,500 கட்டணம் மற்றும் குறைந்த அளவிலான வரி விதிப்பு இப்பயண கட்டணமாகும். விமான கட்டணம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் கூடுதல் தொகையை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ள நிதியம் மூலம் விமான நிறுவனத் துக்கு அளிக்கப்படும். இதற்கென சாத்தியக்கூறு நிதியம் (விஜிஎப்) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிதியத்துக்கான தொகை லாபகரமாக இயங்கும் விமான மார்க்கத்தில் பயணிகளிடம் வசூலிக்கும் 2 சதவீத செஸ் மூலம் பெறப்படும் அல்லது ஒவ்வொரு முறையும் ரூ. 8 ஆயிரத்தை விமான நிறுவனங்கள் இந்த நிதியத்துக்கு செலுத்தும்படி கோரப்படும்.

SCROLL FOR NEXT