ஆன்லைன் மூலம் பயண சேவைகளை வழங்கிவரும் மேக் மை டிரிப் நிறுவனம் இபிபோ குழும நிறுவனத்தின் இந்திய வர்த்தகச் செயல்பாடுகளை வாங்கியுள்ளது. இதன் மூலம் நாட்டின் மிகப்பெரிய ஆன்லைன் பயண சேவைகளை வழங்கும் நிறுவனமாக மேக் மை டிரிப் உருவாகியுள்ளது. இந்த கையகப்படுத்துதல் மதிப்பு 180 கோடி டாலராக இருக்கும் என மார்கன் ஸ்டான்லி கணித்துள்ளது.
ஆனால் இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. இந்த இணைப்பு நிறுவனத்தில் 40 சதவீத பங்குகள் நாஸ்பர்ஸ் மற்றும் டென்செண்ட் ஆகிய நிறுவனங்களிடம் இருக்கும். மீதமுள்ள 60 சதவீத பங்குகள் மேக் மை டிரிப் பங்குதாரர்களிடம் இருக்கும். நாஸ்பர்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமே இபிபோ.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இபிபோ குழும நிறுவனங்களான கோஇபிபோ, ரெட்பஸ், ரைடு, ரைட்ஸ்டே ஆகியவை மேக் மை டிரிப் நிறுவனத்தின் கீழ் வரும்.
``இந்த ஒப்பந்தம் எங்களது தொழிலை மேலும் விரிவடையச் செய்வதற்கு உதவியாக இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதுமட்டுமல்லாமல் இந்திய பயணிகளுக்கு முன்பதிவு செய்வதில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறோம். இணைப்பு நிறுவனம் தற்போதுள்ள நிறுவனங்கள் மூலமாக தொழில்களை மேற்கொள்ளும். இந்த இணைப்புக்குரிய அனைத்து பரிமாற்றங்களும் வருகின்ற டிசம்பர் மாத இறுதிக்குள் முடிவடையும்’’ என்று மேக் மை டிரிப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தீப் கார்லா தெரிவித்துள்ளார்.