தற்போதைய மத்திய அரசு எடுத்து வரும் கடுமையான நடவடிக்கைகளால் பொருளாதாரம் மேலும் வளர்ச்சி அடையும் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்திருக்கிறார். நடப்பு கணக்கு பற்றாக்குறை 3,200 கோடி டாலர் என்ற அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளதாகவும், நிதிப்பற்றாக்குறை ஏற்கெனவே திட்டமிட்ட இலக்குக்குள் இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
இருந்தாலும் வரி வசூல் கடந்த நிதி ஆண்டில் திட்டமிட்டபடி இல்லை என்றும் தெரிவித்தார். கடந்த ஆண்டில் 8,800 கோடி டாலராக இருந்த நடப்புக்கணக்கு பற்றாக்குறை இப்போது 3,200 கோடி டாலராக குறைக்கப்பட்டிருக்கிறது என்று காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
2012-13-ம் நிதி ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை நாட்டின் ஜிடிபியில் 4.7 சதவீதமாக இருந்தது. ஆனால் 2013-14-ம் நிதி ஆண்டில் குறைந்து இந்திய ஜிடிபியில் 1.7 சதவீதமாக இருக்கிறது என்றார். பொருளாதாரம் மேலே வளர்கிறது என்பதற்கான அறிகுறி இது என்றார்.
சந்தையில் நடக்கும் ஒவ்வொரு மாற்றத்துக்கும் மோடி வருகிறார் என்று சொல்கிறீர்கள். இந்த தவறை செய்யாதீர்கள். யார் வருகிறார் என்று மே 16-ம் தேதி தெரிந்துவிடும். மேலும் பங்குச்சந்தையில் நடக்கும் ஏற்றத்துக்கு காரணமான முதலீட்டாளர்கள் இந்திய பொருளாதாரத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பதை காண்பிக்கிறது என்றார்.