வணிகம்

ஊழியர்கள் ராஜினாமாவை கட்டுப்படுத்த 2023-ல் 10% ஊதிய உயர்வு - இந்திய நிறுவனங்கள் திட்டம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: கரோனா பரவத் தொடங்கியதை அடுத்து பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதித்தன. சென்ற ஆண்டு கரோனா தொற்று தீவிரம் குறைந்ததை அடுத்து பல நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலகத்துக்கு அழைத்தன. இதற்கு சிலர் தயக்கம் காட்டினர்.

இதனால், வீட்டிலிருந்து பணிபுரியும் வாய்ப்பைத் தரும் நிறுவனங்களை நோக்கிச் செல்லத் தொடங்கினர். இதனால் ஊழியர்கள் தாமாக முன்வந்து ராஜினாமா செய்வது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் ஆலோசனை நிறுவனமான வில்லிஸ் டவர்ஸ் வாஸ்டன் 168 நாடுகளில் உள்ள நிறுவனங்களில், ஊழியர்களின் ஊதியம் தொடர்பாக மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் அறிக்கை தயார் செய்துள்ளது. இந்தியாவில் 590 நிறுவனங்கள் இந்த அறிக்கைக்காக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

அதன்படி, இந்தியாவில் உள்ள நிறுவனங்கள், 2023-ம் ஆண்டில் ஊழியர்களுக்கு 10% அளவில் ஊதிய உயர்வு வழங்கும் என்றும் குறிப்பாக, தொழில்நுட்பம், நிதி சேவைகள், ஊடகம், கேமிங் உள்ளிட்ட துறைகளில் ஊதிய உயர்வு அதிகம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில், இந்தியாவில்தான் ஊதிய உயர்வு10% வழங்கப்பட இருப்பதாகவும் சீனாவில் 6%, ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் 4% அளவிலே ஊதிய உயர்வு வழங்கப்பட இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் 42% நிறுவனங்களின் வருவாய் அடுத்த ஓராண்டுக்கு மேம்பட்ட நிலையில் இருக்கும் என்றும், வெறும் 7% நிறுவனங்களின் வருவாய் சரிவில் இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது.

SCROLL FOR NEXT