திங்கள் கிழமை சரிவுடன் முடிந்த இந்திய பங்குச்சந்தைகள், நேற்று ஏற்றத்தில் முடிவடைந்தன. சர்வதேச சூழல் மற்றும் முதலீட்டாளர்களின் வாங்கும் போக்கு அதிகரித்ததன் காரண மாக நேற்றைய வர்த்தகத்தில் ஏற்றம் இருந்தது. சென்செக்ஸ் 521 புள்ளிகள் உயர்ந்து 28050 புள்ளியில் முடிவடைந்தன. அதேபோல நிப்டி 157 புள்ளிகள் உயர்ந்து 8677 புள்ளியில் முடிவடைந்தன. மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகளும் ஒரு சதவீதத்துக்கு மேல் உயர்ந்தன.
அனைத்துத் துறை குறியீடுகளும் உயர்ந்தே முடிவடைந்தன. குறிப்பாக வங்கித்துறை குறியீடு 2.37 சதவீதம் உயர்ந்தது. கேபிடல் குட்ஸ், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மெட்டல் ஆகிய குறியீடுகளும் உயர்ந்தே முடிவடைந்தன.
சென்செக்ஸ் பங்குகளில் அதானி போர்ட்ஸ் (6.3%), ஐசிஐசிஐ வங்கி (4.58%), ஹெச்டிஎப்சி (3.82%), டாடா ஸ்டீல் (3.46%) மற்றும் எல் அண்ட் டி (2.85%) ஆகிய பங்குகள் உயர்ந்து முடிந்தன. சென்செக்ஸ் பட்டியலில் ஓஎன்ஜிசி மற்றும் ஏசியன் பெயின்ட்ஸ் ஆகிய பங்குகள் மட்டுமே சரிந்து முடிந்தன.
முக்கிய கமாடிட்டிகள் விலை உயர்வு, டாலர் சரிவு, அதன் காரணமாக சர்வதேச அளவில் மற்ற கரன்ஸிகளின் மதிப்பு உயர்வு ஆகியவை காரணமாக இந்திய சந்தைகள் மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் முக்கிய சந்தைகளும் நேற்று உயர்ந்தே முடிந்தன.
தவிர ஜிஎஸ்டி குழு கூடும் சூழலில் வரி விகிதம் குறித்த கருத்தொற்றுமை ஏற்பட வாய்ப்பு இருப்பதாலும் இந்திய பங்குச்சந்தைகள் நேற்று உயர்ந்து முடிந்தன.