காரைக்கால்: ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிரான போராட்டங்களால் ரூ.200 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் செயல் இயக்குநரும், காவிரிப் படுகை பொது மேலாளருமான அனுராக் தெரிவித்தார்.
காரைக்கால் மாவட்டம் நிரவியில் உள்ள ஓஎன்ஜிசி காவிரிப் படுகை நிர்வாக அலுவலக வளாகத்தில், நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றிவைத்த பிறகு, அவர் பேசியது:
உலகத் தரவரிசைப் பட்டியலில் ஓஎன்ஜிசி 25-வது இடத்தில் உள்ளது. மக்கள் சேவையில் தொடர்ந்து வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஓஎன்ஜிசி, காவிரிப் படுகையை பொருத்தவரை, தொடர்ந்து போராட்டங்களையும், எதிர்ப்புகளையும் சந்தித்து வருகிறது.
குறிப்பாக, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அறிவிக்கப்பட்ட பிறகு மிகவும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இருப்பினும், உற்பத்தி இலக்கை முடிந்த வரை நிறைவேற்றி வருகிறது.
ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிரான போராட்டங்களால் ரூ.200 கோடி அளவுக்கு இழப்பை சந்தித்துள்ளது. இது, மக்களுக்குச் சென்று சேர வேண்டிய தொகை. ஆக்கப்பூர்வமாக செயல்பட அனுமதித்திருந்தால், நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் தேவைகளுக்கும் இந்தத் தொகை கிடைத்திருக்கும்.
மேலும், புதிய கிணறுகள் அமைப்பதில் ஏற்பட்டுள்ள சிரமம் காரணமாக, துரப்பண இயந்திரங்களை அண்டை மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எவ்வளவு சோதனைகள் வந்தாலும், தளராமல் எங்கள் நிலையை மக்களுக்கும், அரசுக்கும் தொடர்ந்து எடுத்துரைத்து வருகிறோம். ஓஎன்ஜிசி நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டால் இந்தப் பகுதி மக்கள் வளம் பெறுவர். இவ்வாறு அவர் பேசினார்.